லண்டனில் இருந்து வந்து பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்….
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து சென்னை வந்த இளைஞர் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெசனட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள் அதிமுக எம்பி, இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதையடுத்து இவரது மனைவி ரத்தினம் (63) தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது மார்பு பகுதியில் கத்தியால் குத்தி ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து பொலிசார் நடத்திய விசாரணையில், ரத்தினத்தின் மகன் பிரவீன் என்பவர் பிரித்தானிய குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சினை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார்.
சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் தனது தாயைக் கொலை செய்ததாக தெரிகிறது.
ஏனெனில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்னை வந்த பிரவீன் தனது தாய் ரத்தினத்திடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ரத்தினம் திருப்பூரில் உள்ள தனது மகள் சுதாவுக்கு போன் செய்து பிரவீன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அடித்து மிரட்டி சொத்தை பிரித்து தர கேட்பதாகவும் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பின்னர் தான் ரத்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் பிரவீனை தேடி வருகிறார்கள்.