பெண்கள் மீது பொலிஸார் கொடூரத் தாக்குதல்?! வடமராட்சி கிழக்கில் பதற்றம்! (Video)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியின் மாளிகைத் திடல் கிராமத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் மேலும் பலர் தாக்கப்பட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தெரிவித்த அவர்கள்,
தமது பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமான கன்ரர் ரக வாகனம் ஒன்று தமது கிராமத்தவர் ஒருவரின் பராமரிப்பில் உள்ளது. அந்த வாகனம் நிற்கும் வீட்டிக்கு வந்த பொலிஸார் அந்த வீட்டாரிடம் வாகனத்தில் கள்ள மணல் ஏற்றப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். பொலிஸார் விசாரணை மேற்கொண் சமயம் சிறுவன் ஒருவன் சம்பவத்தினை தொலைபேசியில் ஒளிப்பதிவுசெய்திருக்கின்றார்.
சம்பவத்தை அவதானித்த பொலிஸார் சிறுவனிடம் இருந்து தொலைபேசியை கைப்பற்றியிருக்கின்றனர். அதன் பின்னர் தொலைபேசியை கையளிக்குமாறு தொலைபேசியின் உரிமையாளர் கேட்டபோது பொலிஸார் மறுக்கவே அது முரண்பாடாக மாறியிருக்கின்றது. அயல் பகுதி மக்களும் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் பொலிஸார் தொலைபேசியை கையளித்துவிடுச் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று அந்தப் பகுதிக்கு பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் சென்றிருக்கின்றனர்.
அங்கு சென்ற அவர்கள் அந்தச் சிறுவன் உட்பட்ட அங்கிருந்த பலரைத் தாக்கியதாகவும் அவர்களில் மூவர் படுகாயம் அடைந்தநிலையில் அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பினை ஏற்படுத்தி அவர்களை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பலர் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுக்கு உள்ளாகிய போதிலும் அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்களை கைது செய்வதாக பொலிஸார் எச்சரித்ததாக அந்த மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாளிகைத் திடல் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

