புதினங்களின் சங்கமம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் புத்தளத்திலுள்ள தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு!

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பொன்றை புத்தளத்தில் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளா்.

அத்துடன் தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற இரு இடங்கள் திருகோணமலை சம்பூா் மற்றும் தோப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இப்போது புதிய கோணத்தில் நகா்வதாகவும் கூறினார்.

பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபா் வழங்கிய தகவல்களின் பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்ட ஒரு இடத்தை சம்பூரில் அடையாளம் கண்டுள்ளோம்.

இந்தப் பகுதியில் வைத்து ஆயுதங்களை களற்றிப் பொருத்துதல், சுத்தம் செய்தல் உள்ளி்ட்ட அடிப்படை ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் புத்தளத்தை தளமாகக் கொண்ட அமைப்பு பலரிடம் தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது. தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஈஸ்ரா் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் மற்றும் வேறு சில தற்கொலைக் குண்டுதாரிகள் இந்த இடத்திற்கு சென்று தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பும் பிரசாரங்களைச் செய்துள்ளனர் எனவும் பொலிஸ் பேச்சாளா் தெரிவித்தார்.

அத்துடன் ஆயுதப் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றொரு இடமும் திருகோணமலை – தோப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்களும் மீட்கப்பட்டன எனவும் பொலிஸ் பேச்சாளா் கூறினார்.