புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை எடுத்து வருபவர்களுக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிசோதனையின் பின்பே பாஸ் அனுமதி

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பொருள்களை எடுத்துவரும் போதும் அல்லது யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் போதும் வழங்கப்படும் பாஸ் அனுமதியைப் பெறுபவர்களுக்கு சுகாதார மருத்துவ அதிகாரியினால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களின் அனுமதியின் பின்னரே பொருள்களை எடுத்துச் செல்வதற்கோ அல்லது இங்கு எடுத்துவருவதற்கு பாஸ் அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வர்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களுடன் பழகியவர்களாக இருப்போர், தனிமைப்படுத்தலுக்கு உள்படவேண்டியவராக இருப்போர், அரியாலை தேவாலய ஆராதனையில் பங்கேற்றவராக இருப்போர் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தப் புதிய நடைமுறை இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் வணிகர் கழகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் வணிகழ் கழக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பில் வணிகர் கழகப் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது;

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பொருள்களை எடுத்துவருவதற்கோ அல்லது இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்கோ அந்த பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலரிடம் அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதியுடன், பாஸ் அனுமதி வழங்கப்படுபவர்கள் தொடர்பில் சுகாதார மருத்துவ அதிகாரியால் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

அதன்பின்னர் மாவட்டச் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்று பாஸ் அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த பாஸ் அனுமதி ஒருமாதத்திற்கு செல்லுபடியாகும். எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்டத்திற்கு மட்டுமே செல்ல முடியும். வேறு மாவட்டத்திற்கு செல்லமுடியாது.

மேலும் இந்த அனுமதி பெற்று செல்பவர்கள் ஏ-9 வீதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். அதுமட்டுமன்றி ஆள்மாறாட்டம் செய்தால் பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

குறிப்பாக எந்த நோக்கத்துக்காக பாஸ் அனுமதி வழங்கப்பட்டதோ, அதனை மீறிச் செயற்பட்டால், பாஸ் அனுமதி ரத்துச் செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் – என்றனர்.