வன்னி அரச அதிகாரிகளால் கேவலப்படுத்தப்படும் அலுவலகப்பணியாளர்கள்!!
முல்லைத்தீவுப் பகுதியில் உள்ளூராட்சி சம்மந்தப்பட்ட முக்கிய அலுவலக அதிகாரி ஒருவர் தனது அலுவலகப் பணியாளரை கேவலப்படுத்திய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த பணியாளர் ஊரடங்கு காரணமாக அலுவலகத்துக்கு சமூகமளிக்கவில்லை. ஊரடங்கு நேரத்தில் அந்த அலுவலகத்தில் அதிகாரி உட்பட ஒரு சில அலுவலர்கள் கடமைபுரிந்ததாக தெரியவருகின்றது. குறித்த பணியாளரும் அலுவலகத்தில் ஒரு சில பணிகள் நடைபெறுவதாக அறிந்து நேற்று அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். ஊரடங்கு நேரத்தில் அலுவலகத்துக்கு ஏன் வரவில்லை என அங்கு நின்ற அதிகாரி குறித்த பணியாளரை தரக்குறைவாக கேவலப்படுத்தி ஏசியதுடன் அந்த அலுவலரை அலுவலகத்தை சுற்றி உள்ள இடங்களில் காணப்பட்ட பற்றைகளை துப்பரவு செய்ய விட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஊரடங்கு நேரத்தில் தெருவில் இறங்கினால் படையினராலும், பொலிசாராலும் தாக்குதலுக்கு உட்படுவதுடன் கைது செய்யும் செயற்பாடும் நடைபெறும் வேளை எந்தவித பாஸ் அனுமதியும் பணியாளருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரி இவ்வாறு பணியாளரை கேவலப்படுத்தியுள்ளது அரச அலுவலர்கள் மத்தியில் விசனத்தை எற்படுத்தியுள்ளது.

