புதினங்களின் சங்கமம்

யாழ் நீதிமன்றத்தில் இருந்து ஓடித் தப்பிய பயங்கரக் கொள்ளை கைதியால் பரபரப்பு!!

யாழ் நீதிமன்றத்தில் இருந்து ஓடித் தப்பிய கைதியால் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக்
கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து நீதிமன்ற பின் வாயிலால் ஓடித் தப்பித்தார்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (8) நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந் என்ற சந்தேகநபரே
இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்தார்.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு மற்றும்
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் உள்ளன.

வழக்குத் தவணைகளுக்கு ஒழுங்காக முன்னிலையாக சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றால்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய கோப்பாய் பொலிஸார் சந்தேகநபரை நேற்றுக் கைது செய்தனர்.

இந்த நிலையில் அவரை நீதிமன்றில் முற்படுத்த இன்று பொலிஸார் அழைத்து வந்தனர். சந்தேகநபரை அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை நீதிமன்றின் உள்பகுதியில் நிற்கவைத்துவிட்டு, பதிவாளரின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

அதனைப் பயன்படுத்திய சந்தேகநபர், நீதிமன்றின் பின்புறமாக உள்ள கீழ் தளத்துக்குள் பாய்ந்து
வளாகத்துக்கு பின்பக்கம் உள்ள படலையால் தப்பித்தார்.

வளாகத்தின் பின் படலையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கடமையில் இல்லாத நிலையிலே சந்தேகநபர் அந்த வழியாகத் தப்பித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.