தமிழ் தேசியத்தை மூலதனமாகக் கொண்டு சிறீலங்கன் பாராளுமன்றத்தில் கதிரையொன்றைப் பெறுவதற்கான போட்டியில்
அரசியலில் யார் வேண்டுமானாலும் குதிக்கலாம். கும்மாளமடிக்கலாம். தமிழ் தேசியத்தை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் சிறீலங்கன் பாராளுமன்றத்தில் கதிரையொன்றைப் பெறுவதற்கான போட்டியில் களமிறமிறங்குபவர்களுக்குக் கவனம் தேவை.
ஊடகவியலாளர் ஒருவர் நேரடியாகத் தேர்தல் அரசியலில் இறங்குவாராயின், அவர் அதுவரை ஆற்றிவந்த அனைத்து நற்காரியங்களும் – அதன் பயனாக உருவாகியிருந்த நன்மதிப்பும் நாறிப்போய்விடும். இதை படிக்கும்போதே இலகுவில் நினைவுக்கு வரக்கூடிய நபர்களின் பெயர்வரிசையில் உங்கள் பெயர் வந்துநிற்கும்.
ஒரு கல்வியலாளர் தேர்தல் அரசியில் இறங்கினால், அவர் போதித்த நற்கல்வியும், அவரது வாழ்வொழுக்கமும் அவரிடம் கற்ற மாணவர்களாலேயே கிழித்துத்தொங்கப்போடப்படும். அவர் கற்பித்த அனைத்தும் பொய்யாகிவிடும்.
சமூகத்துக்கு உதவுகிறேன், கருத்துச்சொல்கிறேன் பேர் வழிகளுக்கும் இதே கதைதான். இப்போதெல்லாம் உதவுகிறேன் பேர்வழிகள் நம் சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கு இந்த வாக்கு அரசியல் கடுமையாக வேலைபார்ப்பதாக உள்ளூர் ஆய்வொன்று சொல்கிறதென்றால் நம்பவா போகிறீர்கள். எனவே இப்போதெல்லாம் உதவுகிறேன் பேர்வழிகளைக் கண்டாலே, “டேய் நடிக்காதடா” எனக்கூறிக்கொண்டே கல்லைத்தூக்கிவிடுகின்றனர்.
2009க்குப் பின்னர் மனித உரிமையாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள் என்போர் தமிழ் சமூகத்தில் நம்பிக்கைக்கு காத்திரமான முக்கிய ஆளுமைகளாக மதிக்கப்பட்டனர். அவர்களின் பணி மிக உன்னதமாக இருந்தது. தேவைப்பட்டது. மேலும் ஆழமாகத் தேவைப்படுகிறது. அவர்களும் கதிரை அரசியலுக்குள் வருவதானது, தமிழ் சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகம். மனித உரிமைக் காப்பாளர்கள் என முகமூடி அணிந்துகொண்டு நீங்கள் வந்து நிற்கையில் இந்த மக்கள் உங்களை நம்பி சொன்ன ரகசியங்கள்தான் எத்தனை? அவையனைத்தும் உங்கள் வாக்குப்பொறுக்கலுக்கான வேலைகள் என்பதை அறியாமலல்லவா உளறிக்கொட்டிவிட்டனர்.
இதே வகையறாக்களுக்குள் மருத்துவர்கள், எழுத்தாளர்கள், திணைக்களங்களின் ஓய்வுநிலை அதிகாரிகள் எனப் பலரும் நடிக்கின்றனர். அது பிழையான, அடுத்தவரை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை.
அப்படியாயின், இவர்கள் இந்த அரசியலில் இறங்கக்கூடாது என்கிறீர்களா எனக் கேள்வியொன்று fake I’d களில் இருந்து கிளம்ப வாய்ப்பிருக்கிறது. எம் சமூகத்துக்கு இந்தத் தரப்பினரின் உளமார்ந்த சேவை மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. எனவே உண்மையான சேவையாளர்கள் அதனையே இன்னும் நல்லுள ஆரோக்கியத்துடன் மேற்கொள்வதே இந்த சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு வாக்கு அரசியலில் ஈடுபடும் மனித உரிமையாளர் ஒருவர் தேர்தலில் தோற்றால், மீளவும் அவரால் தன் முற்சேவையை உளப்பூர்வமாக செய்ய முடியுமா? அப்படியான ஊடகர் ஒருவர் தரும் செய்தி அரசியலற்றது என்பதை மக்கள் நம்புவார்களா? எனவே கதிரைக்கான அரசியலில் இவ்வகை ஆளுமைகளின் தோல்வியானது, அதே துறையில் நல்ல நோக்கத்துடன் செயற்படுபவர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவது.
அடுத்து சிறீலங்காவின் பாராளுமன்ற முறைக்குள் தமிழ் பிரதிநிதிகளுக்கு ஒரு அதிகாரமும் இருப்பதில்லை. வாக்கெடுப்பைத் தவிர வேறெதற்கும் இவர்களைப் பயன்படுத்திகொள்வதில்லை. அவ்வப்போது கிடைக்கும் அமைச்சு : பிரதி அமைச்சுப் பதவிகளும் மங்களம் பாடுவதற்கே பயன்படுகிறது. எனவே முறைசாரா மேற்குறித்த திடீர் அரசியல்வாதிகளால் பென்சனுடன் ஒரு வேலைவாய்ப்பை பெறுவதைத் தவிர வேறெதுவும் நடக்கப்போவதில்லை. அதற்க்கு Srilankan system அனுமதியும் தராது.
அப்படியாயின் சட்டத்தரணிகள் மட்டும்தான் கதிரை அரசியலுக்கு வரலாமா? என ஒரு கேள்வி கிளம்பும். பதிவு நீண்டு செல்கிறபடியால் இதற்கான பதிலை இன்னொரு பதிவில் பார்ப்போம். (கொமண்ட் செய்யும் அந்த நால்வருக்கும் நள்ளிரவுக்குப் பின்னரே பதில் வழங்கப்படும். காரணம், நாய்க்கு வேலையுமில்லை, நிற்க….)

