“கத்துக்குட்டிகள்” -தேவன்-

தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதரப்படுகொலையாளிகள் என்று விளிப்பவர்களின் மனநிலைப்பிறழ்வுக்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தமிழில் “கத்துக்குட்டிகள்” என்றொரு சொல்லாடல் இருக்கிறதல்லவா.. அந்த ஒரே சொல்லோடு இவர்களை அடித்துத்துவம்சம் செய்துவிடமுடியும்.

வரலாற்றைக் கற்றுக்கொள்ள இரண்டு படிமுறைகள் எல்லோருக்கும் வாய்க்கும். வரலாறு எழுதப்படும் காலத்தில் வாழ்ந்து கற்றுக்கொள்ளல் ஒன்று. இரண்டாவது வரலாறு எழுதப்பட்ட பின்னர் பிறந்து அறம்சார்ந்த ஆளுமைகளால் கற்பிக்கப்படும் வரலாற்றைக் கற்றுக்கொள்ளல். இவை இரண்டுமில்லாது, நடுவில் சிக்கிக்கொண்டு சுவரொட்டிகளை மேய்ந்துவிட்டு அலறும் கழுதைகளே நான் மேற்கூறிய கத்துக்குட்டிகள்.

இந்திய இராணுவம் ஈழத்திற்கு வரமுன்னர் நகர்ந்த வரலாற்றுப்போக்கினை நான் நன்கறியக் கற்றுத்தந்தவர்கள் எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் மற்றும் எனது அப்பா. இதில் தொடர்மனித ஓட்டமாக வரலாற்றின் போக்கில் இணைந்து ஓட எனக்கு உதவியவை நூல்கள். சரி ஆசிரியர்களும் நூல்களும் எனது அப்பாவும் எனக்குப் பொய்களைக் கற்றுத்தந்திருக்கக்கூடும் என்றே வைத்துக்கொள்வோம்.

அல்பிரட் துரையப்பா என்பவர் மீது பிரபாகரன் என்ற தனிமனிதன் மேற்கொண்ட நடவடிக்கைக்கான காரணத்திலிருந்து புளொட் மோகனுக்கு விடுதலைப்புலிகள் வழங்கிய தண்டனைவரை எல்லோருமறிந்த ஒரேகதையை திருப்பத்திரும்ப அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக “கத்துக்குட்டிகளின்” பக்கமாகவே நின்று யோசிப்போம்.

எல்லா இயக்கங்களையும் விடுதலைப்புலிகள் அழித்தனர் என்று முழுமூச்சாக வாந்தி எடுக்கமுன், பாலகுமார் என்ற ஈரோஸ் அமைப்பின்தலைவரை எவ்வாறு விடுதலைப்புலிகள் அணைத்துக்கொண்டனர் என்று சிந்திக்க இந்தக் கத்துக்குட்டிகள் அறியவில்லை.

புளொட் அமைப்பிலிருந்த பலருக்கு விடுதலைப்புலிகள் மரணதண்டனை வழங்கிய அதேவேளை, அவ்வமைப்பிலிருந்தே ஊறித்திளைத்த சிவராம் என்ற ஊடகவியலாளருக்கு “மாமனிதர்” என்ற உயரிய மதிப்பை வழங்கிய காரணத்தை இந்தக்கத்துக்குட்டிகள் அறிய முனையவில்லை.

ஈபிடிபி அமைப்பிலிருந்து தினமுரசு பத்திரிகைக்கு எழுதிக்கொண்டிருந்த அரசியல்ஆய்வாளர் பாலா என்பவர், ஈபிடிபியின் செயற்பாடுகளால் மனமுடைந்து வன்னியுடன் தொடர்பை ஏற்படுத்தி அங்கு வரவிருந்தவேளை, இதை எப்படியோ அறிந்துகொண்ட டக்ளஸ் குழு வெள்ளவத்தை பாமன்கடைச் சந்தியில் அவரைப் படுகொலைசெய்துவிட்டு, செய்தி வெளியில் செய்திவரமுன்னரே அவரது குடும்பத்தினருக்கு அறிவித்த சூத்திரத்தை இந்தக் கத்துக்குட்டிகள் அறியவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய சிவராம் அவர்கள் முற்றுமுழுதாக புளொட் அமைப்பைச்சார்ந்தவராக இருந்தும், அவரது எண்ணக்கருவிற்கு மதிப்பளித்து, முஸ்லிம் மக்களின் சார்பாக ரவூப் ஹக்கீமை ஏன் தலைவர் சந்தித்து உரையாடினார் என்பதை இந்தக்கத்துக்குட்டிகள் அறியவில்லை.

விடுதலை என்ற பெயரை தமது அமைப்புக்குச் சொருகிக்கொண்டு சொந்த இனத்தைச்சூறையாடிய ஈபிடிபி, EPRLF , புளொட் குழுக்கள் மீதான நடவடிக்கைகளுக்கு முன்பாக அனைத்துத்தேசவிரோத நடவடிக்கைகளையும் கைவிடச்சொல்லி தமிழீழ விடுதலைப்புலிகளினால் வழங்கப்படும் எச்சரிக்கைக் கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட அறிவுறுத்தல்களின் பின்னரே விடுதலைப்புலிகள் தண்டனை வழங்குவது பற்றி இந்தக் கத்துக்குட்டிகள் அறிவதில்லை.

இந்திய வல்லாதிக்க அரசின் இராணுவத்தோடு நின்ற EPRLF இயக்கம் தனித்து வளரமுடியாமற்போனமைக்கான காரணம் மக்களின் ஆதரவற்ற நிலையும் அவர்களது படுகொலை மற்றும் கற்பழிப்புகளுமே காரணம். சுமந்திரன் உளறுவது போல, எல்லோரையும் அழித்துவிட்டே விடுதலைப்புலிகள் தனித்த இயக்கமாக மாறினார்கள் என்றால்; சுமந்திரனும் அவர்தம் தோப்பனாரும், அடைக்கலநாதனும்,சித்தார்த்தனும், ஏன் மாவையரும் சம்பந்தரும் கூட இப்போது பரலோகத்தில்தான் இருந்திருக்கவேண்டும்.

ஆனால் மறுபுறமாக, விடுதலைப்புலிகளுடனான எவ்வித தொடர்புமற்று தேசவிடுதலை என்ற ஒரே குறிக்கோளுடன் அரசியலில் இயங்கியமைக்காகப் படுகொலை செய்யப்பட்ட ,மாமனிதர் குமார் பொன்னம்பலம், மாமனிதர் பரராஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ், ஊடக ஆளுமைகள் சிவராம், நடேசன், நிமலராஜன் போன்ற தமிழினத்தின் கற்பிதங்களைப் படுகொலை செய்து அழித்தது யாரென்றாவது இந்தக்கத்துக்குட்டிக் கழுதைகள் அறிந்தபின் முகநூலில் சுவரொட்டி மேயவும்.

-தேவன்

error

Enjoy this blog? Please spread the word :)