Vampan memesபுதினங்களின் சங்கமம்

வடக்கு அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் ‘கொறோனா‘ வைரஸ் கோத்தாவா??அங்கஜனா?? டக்ளசா??

ஜனாதிபதியாக கோத்தபாய வந்தபின்னர் வடக்கில் உள்ள பல அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பந்தாடப்பட்டு வருகின்றனர். பந்தாடப்படவுள்ளனர். கடந்த ஆட்சியில் இவர்கள் கூட்டமைப்புடன் நெருங்கிச் செயற்பட்டு வந்தார்கள் என்று கருதியே அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றார்கள். கடந்த நல்லாட்சியில் கோப்பாய் பிரதேசசெயலராக இருந்த ம.பிரதீபன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக முல்லைத்தீவுக்கு இடமாற்றப்பட்டிருந்தார். தற்போது அவர் யாழ்ப்பாண செயலகத்தில் மேலதிக அரசஅதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

பிரதீபனை யாழ் மேலதிக அரசஅதிபராக மாற்றியது தேசிப்பட்டியல் எம்.பியாக தெரிவு செய்யப்பட்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் உலா வருகின்றது. அங்கஜன் இராமநாதனின் சித்தப்பாவான ராஜன் என்பவர் பிரபல வர்த்தகர் என்றும் அவர் தற்போது கோத்தபாய அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக உள்ள ஜனக்க பண்டார தென்னகோனைத் தொடர்பு கொண்டு இவ்வாறான இடமாற்றத்தைச் செய்தார் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனக்க பண்டார தென்னகோன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற போது ராஜன் அவருக்கு பெருமளவு நிதிஉதவி செய்தே ம.பிரதீபனை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினார் எனவும் அவ்வாறே யாழ்ப்பாண அரசஅதிபரையும் வடக்கில் உள்ள அரசஅதிபர்களையும் அவர் மாற்றுகின்றார் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.

இதே வேளை ம.பிரதீபன் நல்லாட்சிக்கு முன்னைய மகிந்தவின் ஆட்சியில் டக்ளசுடன் மிகுந்த உறவு கொண்டிருந்தவர் என்பதுடன் டக்ளசின் நெருக்கமானவரான ருசாங்கன் என்பவரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது என சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதே வேளை அங்கஜன் இராமநாதனே அதிகாரிகளை இடமாற்றுகின்றார் என்பதை சில சமூகவலைத்தளவாசிகள் மறுக்கின்றனர். டக்ளசே அங்கஜனின் தலையில் இவற்றைச் சுமத்தி இரகசியமாக அதிகாரிகளை மாற்றி வருகின்றார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை கோத்தபாய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் செயற்படும் இரகசியப் புலனாய்வாளர்களின் தகவல்களின்படியே வடக்கு அதிகாரிகள் பந்தாடப்படுவதும் வடக்கில் பல அரசநிர்வாக மாற்றச் செயற்பாடுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதற்கும் காரணம் எனவும் அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களின் வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக நேர்மையான அரச அதிகாரி என தற்போது கூட்டமைப்பைச் சார்ந்தவர்களால் கொண்டாடப்படும் ஓய்வு பெற்ற யாழ் அரசஅதிபர் வேதநாயகம் அவர்களையும் மன்னார் அரசஅதிபரையும் மாற்றியதற்கு அங்கஜன் காரணம் அல்ல என்றும் கோத்தாவின் புலனாய்வு அமைப்பே அவர்களை உடனடியாக மாற்றுவதற்கான காரணமாக இருந்தது எனவும் சிலரின் பேஸ்புக் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

வடக்கில் உள்ள அரச உயர் அதிகாரிகள் தற்போது தங்களது நிலையை தக்க வைப்பதற்காகவும் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் எந்த அரசியல்வாதி செல்வாக்கு மிக்கவர் என்பதை அறிய தமது அனைத்து திறனையும் பயன்படுத்தி வருகின்றார்கள் எனவும் குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் விஜயகலாவுக்கும் கூட்டமைப்புக்கும் வால்பிடித்து திரிந்தவர்கள் பலர் தற்போது அங்கஜனுக்கா டக்ளசுக்கா வால்பிடிப்பது என யோசித்துக் கொண்டு இருப்பதாகவும் சமூகவலைத்தளவாசிகள் கிண்டல் அடிக்கின்றார்கள்.

இருப்பினும் தற்போது வடக்கு அரச அதிகாரிகளுக்கு தங்களை தாக்கப் போகும் கொரோனா வைரஸ் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.