பொலிசாரைக் கண்டதும் கடலுக்குள் கஞ்சாவை வீசிவிட்டு ஓடியவர்கள் யார்?
இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது மெரைன்பொலிஸாரை கண்டதும் கடலில் வீசி சென்ற கேரளா கஞ்சா பொதிகளை மெரைன் பொலிஸார் இன்று (30) காலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி, சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக மெரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து கடலோர காவல் பொலிஸ் ஆய்வாளர் கனகராஜ் மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜ் குமார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட பொலிஸார் 4 குழுக்களாக பிரிந்து கடற்கரை பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த நபர்கள் பொலிஸாரை கண்டதும் படகில் இருந்த பொதிகளை கடலில் வீசி விட்டு சென்றனர்.
இதனை கண்ட மெரைன் பொலிஸார் தப்பி சென்ற படகை பிடிக்க கடலுக்குள் விரைந்தனர். ஆனால் படகு சற்று நேரத்தில் மாயமானது. கடலில் இருந்து வீசப்பட்ட பொட்டலங்களை கைபற்றிய மெரைன் பொலிஸார் சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
தப்பி சென்ற படகு குறித்து மெரைன் பொலிஸார், இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய, இலங்கை கடற்படையினருக்கு தகவல் கொடுத்து படகை தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தின் போது இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தனுஷ்கோடி பகுயில் மறைந்துள்ளனரா? அல்லது தமிழகத்ததை சேர்ந்த கடத்தல்காரர்கள் பொலிஸாரை கண்டதும் தீவுகளில் மறைந்துள்ளனரா? என்பது குறித்து கரை ஓரங்களிலும் தீவு பகுதிகளிலும் மெரைன் பொலிஸார் தீவிர சோதணை நடத்தி வருகின்றனர்.
இதன்போது கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட பொதிகளில் இருந்து சுமார் 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து இராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

