யாழ்.மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல்
யாழ். மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தும் வகையில் விபரங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், “மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், எங்களுடைய வீடுகளுக்கு வெள்ளை வாகனத்தில் வந்த சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எங்கள் விபரங்களை சேகரித்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட ஒருவரை தேடி வெள்ளை வாகனத்தில் வந்த 4 போ் அவரிடம் விசாரணை நடத்தினர் அதேபோல் மற்றொருவரின் வீட்டுக்கு கடந்த 11ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் படுகொலை நடந்த இடம் மற்றும் குடும்பத்தில் இறந்தவா்கள் யாா்? போன்ற தகவல்களை பெற்றுச்சென்றனர்.
படுகொலை சம்பவத்தில் சிறையில் இருந்த இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் எங்களுக்கு விடுக்கப்படுகின்றது” என மேலும் தெரிவித்தனர்.

