கோத்தபாய ஆலோசகர் பாடசாலை அதிபரை மிரட்டினாரா?
கொழும்பிலுள்ள பாடசாலையொன்றின் அதிபரை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிடப்படும் சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் குறிப்பிடப்படுபவரும், இன்னொரு நபரும் பாடசாலையின் அதிபரை தாக்க முயன்றதாக நேற்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு, சம்பவத்தில் பதிவான ஒலிப்பதிவையும் வெளியிட்டிருந்தன.
மொரட்டுவாவின் இளவரசர் வேல்ஸ் கல்லூரி அதிபரே மிரட்டப்பட்டுள்ளார். மாணவர் அனுமதி விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர, ஜனாதிபதி கோட்டாபய, கல்வி அமைச்சரிற்கு நெருக்கமானவர்கள் என குறிப்பிட்டு மேலும் சிலரும் மாணவர் அனுமதியில் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் முயற்சி தொடர்பாக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் அதிபர் முறையிட்டபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென குற்றம்சுமத்தப்படுகிறது.
ஊடகங்களில் இந்த விவகாரம் சர்ச்சையாகியதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின்படி, கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் பாடசாலை அதிபரிடம் அறிக்கையொன்றை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

