புதினங்களின் சங்கமம்

வடக்கில் சூரிய கிரகணத்தை யாரும் பார்க்கலாம்!! மர்ம கதிர்கள் வரவே வராது!!

சூரிய கிரகணத்தை சிறுவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை பார்க்கலாம். சூரிய கிரகணத்தின் போது சூரியனில் எந்த மாற்றமும் ஏற்படாது, அதிலிருந்து மர்மக் கதிரும் வீசாது” என்று புதுடில்லி விஞ்ஞான் பிரசார் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

வரும் டிசெம்பர் 26ஆம் திகதி அபூர்வ சூரிய கிரகணம் இலங்கையின் வடக்கு மாகாண மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் முழுமையாகத் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கான சிறப்பு முகாம்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது:

டிசெம்பர் 26, அதிசய சூரிய கிரகணம் காலை சுமார் 8:07க்கு ஆரம்பமாகி முற்பகல் 11:16 வரை நிகழ்கிறது.
சில நிமிடங்கள் வரை தீ வளையம் போல சூரியன் அற்புதமாகக் காட்சி தரும். சுமார் இரண்டு நிமிடம்வரை நெருப்பு வளையம் போல தென்படும்.

இந்த நிகழ்வில் நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். சூரிய ஒளியால் ஏற்படும் ஒரு வான் பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். எடுத்துக்காட்டாக, சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல், பூமியில் விழும்போது அது சூரிய கிரகணம். பூமியின் நிழல், முழுநிலவின் மீது விழுந்து, அது மறைவது சந்திர கிரகணம்.

இவை இயற்கை நிகழ்வு. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்கிறது. அதனைக் கூர்ந்து கவனித்த நம் முன்னோர்கள், வானவியற் கண்ணோட்டத்தோடு, அதன் காலத்தை கிட்டத்தட்டச் சரியாகச் சொன்னார்கள். இன்றைய அறிவியல் மேலும் கூர்மையாகக் கணிக்கிறது.
கோள்களின் இயக்கங்கள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாக ஆராய்கிறது. நிலவு, பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. அதேபோல, பூமியும் சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. எனவே நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு எப்போதும் ஒரே அளவில் இருக்காது. சேய்மை நிலையில் உள்ள போது, நிலவின் தொலைவு கூடியும், அண்மை நிலையில் உள்ள போது, தொலைவு குறைந்தும் காணப்படும்.

வருகின்ற டிசெம்பர் 26 அன்று, பூமி சூரியனுக்கு அருகாமையில் இருக்கும். எனவே சூரியனின் தோற்றம் சற்று பெரியதாகத் தெரியும். இதே காலகட்டத்தில், நிலவு, பூமியிலிருந்து தொலைதூரத்தில் அமையும். அதனால், அதன் தோற்றம், சற்றே சிறியதாகத் தெரியும். இதன் காரணமாக, தோற்றத்தின் அளவில் சற்று பெரியதாகக் காட்சி தரும் சூரியனை, தோற்றத்தின் அளவில் சிறியதாக இருக்கும் நிலவு, முழுதாக மறைக்க முடியாது.
சூரியனின் விளிம்பு, நிலவின் வட்டத்தை தாண்டி அமையும். எனவேதான், அன்றைக்கு வானில் நெருப்பு வளையம் போலத் தென்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இதையே வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கிறோம்.

சூரியனை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. நுண்துளை கமரா கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரியனின் பிம்பத்தை திரையில் வீழ்த்தி, காண்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை. மேலும் சூரிய ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் சூரியக் கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.

கிரகணத்தின் போது ஏதோ மர்மக் கதிர்கள் வருகின்றன. எனவேதான் சூரிய கிரகணத்தைக் காணக்கூடாது. வெளியே வரக்கூடாது. சாப்பிடக் கூடாது எனப் பலரும் தவறாக கருதுகின்றனர். அப்படியெலாம் ஏதும் இல்லை. கிரகணம் என்பது நிழல்தான். மரத்தின் நிழலில் இருப்பதுவும், நிலவின் நிழலில் இருப்பதும் ஒன்றுதான்.
கிரகணத்தின் போது சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை. எனவே எந்தவித மர்மக் கதிர்களும் வருவது இல்லை. அதனால், சிறியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைத்து மக்களையும், இந்த அரிய நிகழ்வைக் காணலாம் என்றார்.