புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்துக்கு நிறந்தீட்டுதல்: யாரால்? யாருக்கு? யாருக்காக? (Photos)

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடமாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது நண்பர் கைபேசியில் என்னை அழைத்தார். யாழ். புகையிரத நிலையத்தில் ஒரு சுவிட்சலாந்து பெண் ஓவியம் வரைகிறார் வருகிறீர்களா போய் பாப்போம் என்று கேட்டார்.
இருவரும் புகையிரத நிலையத்திற்கு போனோம். அங்கே இரண்டாவது மேடையை நோக்கிச் செல்லும் நிலக்கீழ் வழியில் அந்த வெளிநாட்டுப் பெண் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்.

அந்த ஓவியங்களில் பென்குயின்கள் இருந்தன. கடலைப் போல அலையைப் போல வடிவங்கள் இருந்தன. ஆனால் யாழ்ப்பாணம் இருக்கவில்லை. நாங்களிருவரும் அவரோடு கதைத்தோம். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தியபின் அவர் இங்கு வந்து ஓவியங்களை வரைகிறார் என்பது தெரிய வந்தது. தான் செய்யும் காரியத்தை ஒரு தொண்டாக கருதியே அவர் செய்து கொண்டிருந்தார். அந்த விடயத்தில் அவரிடம் ஓர் அர்ப்பணிப்பு இருந்தது. விடாமுயற்சி இருந்தது. களைப்பின்றி தொடர்ச்சியாக வரைந்து கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய ஓவியங்களில் யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறை வெளி வரவில்லை என்பதனை அவருக்கு சுட்டிக் காட்டினோம். எந்தச் சுவரில் அவர் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தாரோ அந்தச் சுவருக்கு பின்னால் இருந்த வாழ்க்கை முறையை அந்த ஓவியங்களில் பிரதிபலிக்கவில்லை என்பதனையும் சுட்டிக் காட்டினோம்.

இன்று அந்தப் பாதை வழியாக புகையிரத நிலையத்தின் இரண்டாவது மேடைக்குச் செல்லும் பயணிகள் நின்று நிதானித்து அந்த ஓவியங்களில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அந்த ஓவியங்கள் யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறையோடு ஒட்டாது அந்தச் சுவருக்கு முற்றிலும் புறத்தியானவைகளாக அவற்றை கடந்து போகின்றவர்களின் மீது எதுவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உறைந்து போய்க் கிடக்கின்றன.

ஒரு புகையிரத நிலையத்தின் நிலக் கீழ் பாதையை அவ்வாறு ஓவியங்களால் நிரப்ப வேண்டும் என்று சிந்தித்தது ஒரு நல்ல முயற்சி. ஆனால் எந்த ஒரு சமூகத்தின் மத்தியில் அந்தச் சுவர் காணப்படுகிறதோ அந்த சமூகத்தின் வாழ்க்கை முறையை பாரம்பரியத்தை மரபுரிமைச் சின்னங்களை அந்த ஓவியங்கள் பிரதிபலிக்கவில்லை.

Image may contain: one or more people, people walking and outdoor

இது நடந்தது ஆளுநர் சந்திரசிறியின் காலகட்டத்தில். அப்போது வட மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை இருக்கவில்லை. பதிலாக அதிகாரிகளின் ஆட்சியே இருந்தது. எனவே ஒரு வெளிநாட்டுப் பெண் புகையிரத நிலையம் ஒன்றின் நிலக்கீழ் பாதையின் சுவர்களையும் விதானங்களையும் தனக்கு விருப்பமான ஓவியங்களால் நிரப்பி விட்டுச் சென்றார்.

இன்று மறுபடியும் யாழ்ப்பாணத்தில் ஒரு சுவர் ஓவிய அலை எழுந்திருக்கிறது. இந்த அலைக்கு பின்னால் ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. புதிய ஜனாதிபதி பதவி ஏற்றபின் தென்னிலங்கையில் நகரங்களைத் தூய்மைப்படுத்தி அவற்றின் சுவர்களில் ஓவியங்களை வரையுமாறு இளைஞர்களை ஊக்குவித்து வரும் ஒரு பின்னணியில் அவருடைய கட்சி ஆட்கள் யாழ்ப்பாணத்திலும் அவ்வாறு ஒரு தொகுதி இளையவர்களை ஊக்குவித்து வருவதாக கூறப்படுகிறது.

தென்னிலங்கையில் இதுபோன்ற சில சுவர் ஓவியங்களில் போர் வெற்றிகளைக் குறிக்கும் ஓவியங்களும் தமிழ் மக்களுக்கு எதிரான சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்களும் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் துயரங்களை வரையாமல் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களை வரையாமல் தமிழ் மக்களின் காயங்களின் மீது வெள்ளை அடிக்கும் ஒரு வேலையே “யாழ்ப்பாணத்துக்கு நிறமூட்டுவது” என்ற கவர்ச்சியான வேலைத்திட்டம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

Image may contain: one or more people and text

ஆனால் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஓவியங்கள் என்று கருதத்தக்க ஓவியங்கள் எல்லாச் சுவர்களிலும் வரையபட்டிருக்கவில்லை. சில சுவர்களில்தான் அவ்வாறு வரையப்பட்டுள்ளன. நீர்கொழும்பு வைத்தியசாலையின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அவ்வாறு இன முரண்பாடுகளை தூண்டிவிடும் ஓவியங்கள் இல்லை. அரசியலை சித்திரிக்கும் ஓவியங்களும் இல்லை.

நகரங்களை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. நகரங்களின் சுவர்களை சுத்தமாகவும் வண்ணமாகவும் வைத்திருப்பது நல்லது. நகரங்களின் சுவர்களையும் கிராமங்களின் சுவர்களையும் வண்ணமயமான ஓவியங்களால் நிரப்புவது நல்லது. அது சமூகச் சூழலை கலை நயம் மிக்கதாக மாற்றும்.

ஆனால் ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தின் உட்சுவர்களுக்கும் வெளிச்சுவர்களுக்கும் நிறமூட்டுவது என்பது தனிய சில இளையோரின் தன்னெழுச்சியான கலை வெளிப்பாடு மட்டுமல்ல. அதற்கும் அப்பால் அது ஒரு பண்பாட்டுச் செய்முறை. அது ஒரு அரசியல் செய்முறை. அது அந்த பண்பாட்டு தலைநகரத்தின் வாழ்க்கைமுறையை சித்தரிப்பதாக மட்டும் அமையக்கூடாது. அதைவிட ஆழமான பொருளில் அந்தப் பண்பாட்டு தலைநகரத்தின் நவீனத்துவத்தையும் அது வெளிப்படுத்த வேண்டும்.

அதை ஒரு பண்பாட்டுச் செய்முறையாக சிந்தித்தால் அந்தப் பெருநகரத்தின் பண்பாட்டுச் செழிப்பை சுவர்களில் சித்திரிக்கவேண்டும். குறிப்பாக அதன் அதன் ‘கொஸ்மோ பொலிற்றன்’ பண்புகளை சித்திரிக்க வேண்டும்.

அதை ஓர் அரசியற் செய்முறையாகச் சிந்தித்தால் அப்பெருநகரத்தின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் கூட்டுக் காயங்களையும் கூட்டுச் சந்தோசங்களையும் சித்திரிக்க வேண்டும்

Image may contain: outdoor

உதாரணமாக, பலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் பலஸ்தீன குடியிருப்புகளையும் யூதக் குடியிருப்புகளையும் பிரிக்கும் பெருமதில்களில் தமது பக்கம் இருக்கும் சுவர்களில் பலஸ்தீனர்கள் தமது அரசியலை வரைந்திருக்கிறார்கள் என்பதனை அங்கு போய் வந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு சுட்டிக் காட்டினார். தமது பக்கச் சுவரை பலஸ்தீனர்கள் அரசியற் செய்திப் பலகையாக மாற்றி இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார். அங்கே ஓவியம் ஓர் எதிர்ப்பு வடிவமாக பிரயோகிக்கப்படுவதாகவும் சொன்னார்.

No photo description available.

இந்த ஓவியங்களில் பெரும்பாலானவற்றை வரைபவரின்  புனை பெயரைத்தான்  தெரியும் என்றும் அவர் யார் என்பது பலருக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.சுவர் ஓவியங்களை இஸ்ரேலியர்கள் இரவிரவாக வண்ணங்களை விசிறி அழிப்பதுண்டு.அல்லது ஓவியப்  பரப்பில் தேவையற்ற வார்த்தைகளை எழுதி விட்டுச் செல்வதுமுண்டு.எனினும் பாலஸ்தீனர்கள் படம் வரைவதை ஒரு தொடர் போராட்ட வடிவமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

தெரு ஓவியம் எனப்படுவதே நவீன ஓவியப் பாரம்பரியத்தில் ஒரு மரபுடைப்புத்தான.

Image may contain: 1 person, outdoor

எனவே தமது சுவர்களை நிறந்தீட்ட விளையும் இளையவர்கள் அதை அதன் பண்பாடுப் பரிமாணத்துக்கூடாகவும் அரசியல் பரிமாணத்துக்கூடாகவும் விளங்கிச் செய்ய வேண்டும். ஒரு பெரிய நகரத்தின் சுவர்களுக்கு வண்ணமூட்டுவது என்பது அந்த பெருநகர வாழ்வின் காயங்களுக்கு வெள்ளை அடிப்பது அல்ல. அதன் இறந்தகாலத்தை மூடி மறைப்பதும் அல்ல. மாறாக அந்த நகரத்தின் மரபுரிமைச் செழிப்பையும் அதன் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் அதன் கொஸ்மோ பொலிற்றன் பண்புகளையும் பிரதிபலிப்பதுதான். ஆயுத மோதல்களுக்கு பின்னரான தமிழ் நவீனத்துவத்தின் எடுத்துக்காட்டுகளாக அவை படைக்கப்பட வேண்டும்.

Image may contain: outdoor

அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். உயரமான கட்டடம் ஒன்றிலிருந்து பார்த்த பொழுது வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் இருந்த தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுச் சின்னத்தை அவர் பார்த்திருக்கிறார். அந்த நினைவுச் சின்னம் மரபையும் பிரதிபலிக்கவில்லை. நவீனமாகவும் இல்லை. அது யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று. அதை நவீனமாக மீள வடிவமைக்க வேண்டும் அதற்குப் பொருத்தமான படைப்பாளிகளை கண்டுபிடித்து அதை யாழ்ப்பாணத்தின் நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு நினைவுச் சின்னமாக மீள வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இவ்வாறு இருக்கின்ற நினைவுச் சின்னங்களையே நவீனமாக மீள வடிவமைக்க வேண்டும் என்று சிந்திக்கப்படும் ஒரு பின்னணிக்குள் யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள் எதைப் பிரதிபலிக்கின்றன?

அந்த ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கும் இளையவர்களைப் பேட்டி கண்டு ஒரு காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த காணொளியில் இளைஞர்களும் யுவதிகளும் கதைக்கிறார்கள். அவர்களுடைய தொனி மொழி எல்லாவற்றிலும் ஒரு வித செயற்கை காணப்படுகிறது. அவர்கள் சொந்தத் தமிழ்த் தொனியில் பேசவில்லை. மாறாக ஆங்கிலத் தனமான ஒரு தொனியில் பேசுகிறார்கள். மொழியிலும் அடிக்கடி ஆங்கிலம் கலக்கிறது. இது ஏறக்குறைய தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பேசும் மொழியை ஒத்திருக்கிறது.

Image may contain: 1 person, outdoor

இவ்வாறு தன் தாய் மொழியையே சொந்தத் தொனியில் பேச முடியாத ஒரு தலைமுறை தனது வேர்களை குறித்தும் வாழ்க்கை முறை குறித்தும் அரசியலைக் குறித்தும் சரியான ஆழமான புரிதலை கொண்டிருக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

அது அவர்களுடைய தவறு அல்ல. அவர்கள் செல்வி யுகத்தின் பிள்ளைகள். அப்படித்தான் கதைப்பார்கள். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகங்களின் மாபெரும் தலைவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது சிறுபிள்ளைத்தனமாக கதைக்கும் பொழுது செல்பி யுகத்தின் இளம் பிள்ளைகள் அவ்வாறு உரையாடுவதை குற்றமாக கூறமுடியாது. குற்றம் எங்கே இருக்கிறது என்றால் அவர்களை உருவாக்கிய பெற்றோர். மூத்தவர்கள், ஆசிரியர்கள், கருத்துருவாக்கிகள், சமயத் தலைவர்கள், சமூக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் போன்றவர்களில்தான்.

Image may contain: one or more people and text

இளைய தலைமுறை அப்படித்தான் நடந்து கொள்ளும். அது தனக்குச் சரி என்று பட்டதை எளிதில் பற்றிக் கொள்ளும். தனக்கு வசதியான ஒன்றை எளிதில் பற்றிக் கொள்ளும். முடிவில் அதன் கைதியாக மாறிவிடும். இப்பொழுது எல்லாமே ‘அப்ளிகேஷன்கள்’ தான் என்று ஒரு மூத்த தமிழ் நூலகர் கூறுவார். இந்த அப்ளிகேஷன்களின் உலகத்தில் இளைய தலைமுறை அப்ளிகேஷன்களின் கைதியாக மாறிவருகிறது. அது ஒன்றை நினைத்தால் அதைச் செயலிகள்,சமூக வலைத்தளங்கள் இலகுவாக்கிக் கொடுக்கின்றன. தான் செய்ய நினைக்கும் ஒன்றை அதன் ஆழ அகலங்களுக்கூடாகத் தரிசிக்கத் தேவையான ஆழமான வாசிப்போ சிந்திப்போ அவர்களிடம் குறைவு.

யாரோ ட்ரெண்டை செற் பண்ணுகிறார்கள் -அதாவது ஒரு புதிய போக்கை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் -அந்த ட்ரெண்டுக்குள் ஒரு பகுதி இளையவர்கள் சிக்குப்படுகிறார்கள்

மேற்குக்கரையில் பலத்தீனர்களையும் யூதர்களையும் பிரிக்கும் பெருஞ் சுவர்

அந்தத் தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் சமூகத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உண்டு.
நீங்கள் வரைவது உங்களுடைய வேர்களை அல்ல. உங்களுடைய மலர்களையும் கனிகளையும் அல்ல. உங்களுடைய வேர் இதைவிட ஆழமானது. உங்களுடைய அரசியல் இதை விட கசப்பானது. பயங்கரமானது. உங்களுடைய சமூகத்தின் ஒரு பகுதி இப்பொழுதும் கூட்டு காயங்களோடு வாழ்கிறது. கூட்டு மனவடுகளோடு வாழ்கிறது……போன்றவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை மூத்தவர்கள் தான் செய்ய வேண்டும். அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் அவர்கள் தங்களுக்கு சரி என்று தோன்றிய ஒன்றை வரைகிறார்கள் அல்லது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை இயக்கும் மறை கரங்கள் எதை ஊக்குவிக்கின்றனவோ அதை அவர்கள் வரைகிறார்கள்.

தமிழ் இளையோர் மத்தியில் தமது காலத்தை பற்றியும் இறந்த காலத்தை பற்றியும் சமூகத்தைப் பற்றியும் ஆழமான பார்வைகள் இல்லை என்பதைத்தான் யாழ்ப்பாணத்து புதிய சுவரோவியங்கள் காட்டுகின்றன. அவர்களை வழிநடத்தும் தகுதியும் கொள்ளளவும் பெரும்பாலான தமிழ்த் தலைவர்களுக்கு இல்லை என்பதைத்தான் இப்புதிய சுவரோவியங்கள் காட்டுகின்றன.

அதேசமயம் வடமாராட்சியில் அக்கறையுள்ள ஊர்மக்கள் ஒன்று கூடி தமது சுவர்களில் எதை வரைவது என்று முடிவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இதுவிடயத்தில் ஒரு கூட்டுத் தீர்மானத்துக்கு வருவது வரவேற்கத்தக்கது.

Image may contain: one or more people and outdoor

அண்மையில் தேர்தலுக்கு முன் வசந்தம் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் கச்சேரியில் யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா இளையோர் அமைப்புகளுக்குமான ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தது. யாழ்ப்பாணத்தில் மொத்தம் 400 க்கும் குறையாத இளையோர் அமைப்புகள் உண்டு. அந்த எல்லா அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கே வந்தார்கள் என்று கூற முடியாது. எனினும் வந்திருந்தவர்களோடு பேசியபோது அவர்கள் எல்லாருக்குள்ளும் ஒரு நெருப்பை உணர முடிந்தது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதே பிரச்சினை. சரியான பொருத்தமான தலைவர்கள் வருவார்களாக இருந்தால் அந்த நெருப்பை மேலும் வளர்த்துச் செல்லலாம் ஆக்க சக்தியாக மாற்றலாம்.