போலி பாஸ்போட்டுடன் இலங்கை வரமுயன்ற தமிழ் அகதி கைது!!
போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கை வர முயன்ற இலங்கை அகதி ஒருவர் மதுரை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“இலங்கை – மன்னாரை சேர்ந்த கிறிஸ்டோபர் அந்தோணியின் மகன் ராபின் ராபட்(46). இலங்கை குடியுரிமை பெற்ற இவர், கடந்த 1983ம் ஆண்டு பெற்றோருடன் இராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அங்கு கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனைத்தொடா்ந்து இராமநாதபுரம் முகவரியில் ஆதார் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் பெற்று இராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் ராபின் என்ற பெயரில் கடவுச்சீட்டு பெற்றுள்ளார்.
குறித்த கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயற்சித்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் ராபின், பேசும் இலங்கை தமிழை வைத்து அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என கண்டுப்பிடித்தனர்.
அத்துடன், போலியாக இராமநாதபுரம் முகவரியில் கடவுச்சீட்டு பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளின் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

