புதினங்களின் சங்கமம்

கோத்தா கொலை முயற்சி என்ற போர்வையில் பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

 

கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இக்காலப்பகுதியில் வேறு அவர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். ஒரு தமிழ் இளையவனின் வாழ்வியலை அநியாயமாக அழித்து அவனை செய்யாத குற்றத்திற்காக இவ்வாறு தண்டித்தமைக்கு சிங்களத்தில் யார் முதலில் பொறுப்பேற்க்கப் போகிறார்கள்? நான் இங்கு முதலில் என்றே குறிப்பிட்டேன். அதை செய்ய வேண்டிய பட்டியலில் பலர் உள்ளனர். இருக்க விடுதலை என மட்டும் அறிவிக்கும் நீதிமன்றங்கள் நட்டஈடு உட்பட இதற்கான பரிகாரங்கள் எதுவும் குறித்து வாழா இருப்பது ஏன்? தமிழர் என்ற அசமந்தப் போக்கா?

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு 2018 யூலையில் சைவ மதக்குரு சிறீஸ்கந்தராசா 13 வருடங்களின் பின்னர் குறிற்றவாளியல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இதே குற்றத்திற்காக விடுதலை செய்யப்பட்டார் என்பது இங்கு வலியுறுத்த வேண்டிய விடயம். இருவர் விடயத்திலும் அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்கள் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட்னர். தாங்கள் வழங்கிய வாக்குமூலம் தாம் சுயாதீனமாக வழங்கியதல்ல என இருவரும் தெரிவித்ததை அடுத்து மேற்கொண்டு எவ்வித தடயங்களையோ சாட்சியங்களையோ வழங்கத்தவறிய நிலையிலேயே இவ்விடுதலைகள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறாயின் அதற்கு ஏன் முறையே 13 மற்றும் 14 வருடங்கள் சிறீலங்கா நீதித்துறைக்கு தேவைப்பட்டது? இருக்க ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்ட இருவரையும் ஒன்றாக விடாது ஏன் ஒரு வருடம் 5 மாதங்கள் இடைவெளியில் விடுதலை செய்ய வேண்டும்? உலகமே ஏற்றுக் கொண்ட இலங்கைத்தீவில் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி தான் மீண்டும் காரணமா?

இருக்க இங்கு இன்னுமொரு விடயத்தையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருதல் அவசியமாகிறது. கோத்தா மீது 2006 டிசம்பர் 1ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்பட்ட விடயம் குறித்து கோத்தாவின் நெருங்கிய சகாவும் அப்போதைய இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா 2016 மே இல் பாராளுமன்றத்தில் பேசும் போது இவ்விடயம் குறித்து பெரும் குண்டொன்றைத் தூக்கிப் போட்டார். அவர் சொன்னார் கோத்தபாயா மீதான தாக்குதல் உள்ளக வேலை. ராஜபக்ச குடும்பம் மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்கும் வகையிலேயே கோத்தபாயவினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதே அத் தாக்குதல் என்றார். 25 மீற்றருக்கு தள்ளி வைத்து யாராவது குண்டை வெடிப்பார்களா? என வேறு போட்டுடைத்தார். அவ் குண்டு வெடிப்பில் கோத்தா எவ்வித பெரும் காயங்களுக்கும் ஆளாகவில்லை.

இச்சம்பத்தைக் காரணமாகக் காட்டி புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு நோர்வேயைப் பணித்த ராஜபக்ச தரப்பு, பின்னர் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறி இராணுவ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர் என்பது வரலாறு. ஆகமொத்தத்தில் தம் சிங்கள மக்களை அணிதிரட்டவும், சர்வதேச சமூகத்தை ஏய்க்கவும் ஆடிய நாடகத்தில் அவர்கள் அனைவரும் பலியானது மட்டுமன்றி, அதை நிஜமெனக்காட்ட பலியாக்கப்பட்ட தமிழர்கள் தற்போது என்னவாகியிருக்கிறார்கள் என்பது மேலும் ஒரு துன்பியல் நிகழ்வு.