புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் சிறுமியை வன்புணர்ந்து தாயாக்கிய குடும்பஸ்தருக்கு 16 ஆண்டு கடூழிய சிறை!!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்து அவரை ஒரு பிள்ளையின் தாயாராக்கிய குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

2011ஆம் ஆண்டு முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளத்தில் 16 வயதுக்கு குறைவான சிறுமியின் உடல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து அவரது தாயார் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தினார். அதன்போது சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்தது.

அதனையடுத்து சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது அயல் வீட்டில் வசிக்கும் குடும்பத்தலைவர் சிறுமியை வன்புணர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது.

சம்பவத்தையடுத்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார். சிறுமியின் வாக்குமூலத்தில் அடிப்படையில் அயல் வீட்டில் வசிக்கும் சேர்ந்த நாகமுத்து பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வழக்கு சட்ட மா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டது.

2010ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்கும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் சிறுமியை எதிரி மூன்று தடவைகள் வன்புணர்ந்தார் எனக் குறிப்பிட்டு 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம், பொலிஸாரின் சாட்சியம் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் நிபுணத்துவ சாட்சியம் என்பன பெறப்பட்ட நிலையில் விசாரணைகள் நிறைவடைந்தன.

இந்த வழக்கின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

“சிறுமியை 3 தடவைகள் வன்புணர்ந்ததாக எதிரிக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் சாட்சியத்தில் எதிரி ஒரு வருட காலத்துக்குள் 3 தடவைகள் வன்புணர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது சாட்சியத்தில் ஒரு தடவைதான் வன்புணரப்பட்டதாக சாட்சியமளித்துள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம், நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் எதிரி முதலாவது குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளியாகக் கண்டு தீர்ப்பளிக்கிறது.

இரண்டாம், மூன்றாம் குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாததால் எதிரி அவற்றிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

“எதிரியை குற்றவாளியாக இனங்கண்டுள்ள மன்று, அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறது.

அத்துடன் குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறினால் 18 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

மேலும் குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.