புதினங்களின் சங்கமம்

பெண்களுக்கு சட்டவிரோதமாக கருத்தடை செய்த குருநாகல் வைத்தியர்!! மீண்டும் விசாரணைக்கு உத்தரவு!!

வைத்தியர் சாபி சியாப்தின் வழக்கு தொடர்பாக சாட்சி முரண்பாடு இருப்பின் மீள விசாரணை செய்ய நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு வைத்தியர் ஷாபி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) காலை குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்கீழ், குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான சியாப்தின் மொஹமட் ஷாபி கைதுசெய்யப்பட்டார்.

அதனையடுத்து தடுத்துவைக்கப்பட்டிருந்த அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லையென தெரிவித்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றபோது குறித்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.