Home புதினங்களின் சங்கமம் தென்கொரியாவில் துயரம்: தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் இருவர் ஒரே விபத்தில் உயிரிழப்பு!

தென்கொரியாவில் துயரம்: தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் இருவர் ஒரே விபத்தில் உயிரிழப்பு!

தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்கள் இருவர், நவம்பர் 26ஆம் திகதி இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வலப்பனை, ஹல்கிரனோயா பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் பிரசாந்தன் (31), கொடகவெல, ரன்வல பகுதியைச் சேர்ந்த தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன (39) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒரே உருக்குத் தொழிற்சாலையில் பணியாற்றிய இருவரும், அன்றைய பணியை நிறைவுசெய்துவிட்டுத் தமது தங்குமிடத்தை நோக்கி நடந்து சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ஷோலுக்குத் தெற்கே, கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசியோங் நகரில் அமைந்துள்ள ஜங்கான்-மியோன் என்ற கிராமப்புறப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இரவு சுமார் 9.10 மணியளவில், ஒற்றைப் பாதையைக் கொண்ட வீதியின் ஓரமாக இருவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது பெரிய முக்கோண வடிவிலான மர வீட்டுக் கூரைப் பகுதிகளை ஏற்றிய பல பாரவூர்திகள் வரிசையாக அவ்வீதியில் பயணித்துள்ளன.

அவற்றில் 7.5 தொன் எடையுடைய பாரவூர்தியொன்றின் சரக்கு ஏற்றும் தளத்துக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த கூரையின் விளிம்பு, இரு தொழிலாளர்களின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மோதியுள்ளது.

குறித்த கூரைப் பகுதி ஹ்வாசியோங்கிலுள்ள தொழிற்சாலையொன்றில் தயாரிக்கப்பட்டு, ஷோலுக்கு வடக்கேயுள்ள டோங்டுச்சியோன் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது இருவரினதும் இதயத்துடிப்பு நின்றிருந்தது. இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சாரதிக்கு எதிராகப் பொலிஸ் விசாரணை:

வழமையான அளவுகளைவிடப் பெரிய சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை குறித்த பாரவூர்தி பெற்றிருந்தது.

தென்கொரிய வீதிச் சட்டத்தின்படி, 2.5 மீற்றருக்கும் அதிகமான அகலம், 4 மீற்றருக்கும் அதிகமான உயரம் அல்லது 16.7 மீற்றருக்கும் அதிகமான நீளம் கொண்ட வாகனங்களுக்கு விசேட அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

50 வயதுக்கு மேற்பட்ட பாரவூர்திச் சாரதி, விபத்தின்போது மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பதுடன், தூக்கக் கலக்கத்திலும் இருக்கவில்லை என ஹ்வாசியோங் சியோபு பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

வீதியின் ஓரப்பகுதியை முறையாக அவதானிக்கத் தவறியதாக விசாரணையின்போது சாரதி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விபத்துகளைத் தீர்ப்பதற்கான விசேட சட்டத்தின் கீழ், உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாரவூர்தியில் பொருத்தப்பட்டிருந்த கமெராவின் காணொளிப் பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், சரக்கு அனுமதிக்கப்பட்ட பரிமாணங்களுக்கு அமைவாக ஏற்றப்பட்டிருந்ததா என்பதையும், அது பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருந்ததா என்பதையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற மறுநாள், உயிரிழப்புகள் தொடர்பாக இலங்கைத் தூதரகத்துக்குக் கொரியப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இருவரினதும் உடல்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தென்கொரிய அதிகாரிகளுடனும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடனும் இணைந்து முன்னெடுத்து வருவதாக இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் தொடரும் இலங்கைத் தொழிலாளர்களின் மரணங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இலங்கையர்களின் முக்கிய இலக்கு நாடுகளில் தென்கொரியாவும் ஒன்றாகும்.

கொரிய அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு அனுமதித் திட்டத்தின் (Employment Permit System) கீழ் அந்நாட்டுக்குச் செல்லும் பெரும்பாலான இலங்கைத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் மீன்பிடித் துறைகளில் பணியாற்றுகின்றனர். தென்கொரியர்கள் பெரும்பாலும் செய்ய விரும்பாத பணிகளிலேயே இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர்கள் அந்நாட்டில் உயிரிழப்பது இது முதல் தடவையல்ல.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கோசோங் மாவட்டத்தில் அமைந்துள்ள மீன் வளர்ப்புப் பண்ணையொன்றின் நீர்த்தொட்டியிலிருந்து இரண்டு இலங்கைத் தொழிலாளர்களும் கொரிய மேற்பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதேவேளை, 2021ஆம் ஆண்டு ஹ்வாசியோங்கிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் 33 வயதுடைய இலங்கைத் தொழிலாளர் ஒருவர் அழுத்தும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிக்கும் காலக்கெடுவைப் பூர்த்திசெய்வதற்காக அவர் தொடர்ச்சியாக 18 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments