மட்டக்களப்பு, கல்முனை, ஏறாவூர் பகுதிகளில் ஒரே மாதத்தில் மூன்று பெண்கள் மாயம்! – பொலிஸார் தீவிர விசாரணை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி, கல்முனை மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஒரு மாத காலத்திற்குள் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்கவும், சம்பவங்களின் பின்னணியைக் கண்டறியவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாவது சம்பவம் – மட்டக்களப்பு கல்லடி
மட்டக்களப்பு உப்போடை, கல்லடியைச் சேர்ந்த தேவகுமாரன் லக்ஷனியா (19) என்ற யுவதி தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26ஆம் திகதி முதல் அவரைக் காணவில்லை எனவும், இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள் 0776545471 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இரண்டாவது சம்பவம் – கல்முனை
அம்பாறை மாவட்டம், கல்முனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் கற்பகக்கரசு என்பவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் அவரது கணவர் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்பு இலக்கங்கள்:
071 419 6223 / 074 278 1199
மூன்றாவது சம்பவம் – ஏறாவூர்
மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடா வீதி, தளவாய் பகுதியைச் சேர்ந்த சசிகரன் சஞ்யுதா (19) என்ற யுவதியைக் காணவில்லை என அவரது தாயார் சரோஜாதேவி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 12.11.2026 அன்று இரவு 7.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய தனது மகள் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தாயார் தெரிவித்துள்ளார்.
இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்பு இலக்கங்கள்:
075 510 6546 / 075 061 5620
மூன்று பெண்களின் நிலை என்ன? மக்கள் மத்தியில் அச்சம்!
ஒரே மாத காலப்பகுதிக்குள் மூன்று பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் காணாமல் போயுள்ளமை கிழக்கு மாகாண மக்களிடையே பெரும் கவலையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
காணாமல் போன மூவரையும் விரைவாகக் கண்டுபிடிக்கவும், ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியையும் முழுமையாக விசாரிக்கவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பெண்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.





