போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் தடுப்புக் கூண்டில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்த குறித்த நபர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், அதிகாலை 12.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டி, அம்பிட்டிய, திலேனகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், நேற்று (19) காலை மாத்தளை, ஹித்தகொல்ல பகுதியில் வைத்து மாத்தளை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது அவரிடமிருந்து 3,010 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதையடுத்து மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இரவு 11 மணியளவில் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவராக இருக்கலாம் எனவும், கண்டி மற்றும் கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





