முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் (வயது 69) காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், 2026 நவம்பர் 14-ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் தனது வல்வெட்டித்துறை இல்லத்தில் உயிரிழந்தார்..
தமிழ் அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்த அவரது வாழ்வின் முக்கிய தருணங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
• சொந்த வீடு கூட இல்லாத எளிமையான அரசியல்வாதி. இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளராகவும் பல தசாப்தங்கள் பதவிகளை வகித்தபோதிலும், தனக்கென ஒரு சொந்த வீடோ, காணியோ அல்லது வாகனமோ இல்லாமல் மிகவும் எளிமையாக வாழ்ந்த அவரது எளிமையும் நேர்மையும் இன்றைய அரசியலில் ஒரு அபூர்வமான பாடம்.
• தனது இளமைக் காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாகத் தனது விடுதலைப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து மக்கள் பிரதிநிதியாக இறுதிவரை பணியாற்றினார்.
இறுதிக்காலத்தில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குக் கூட மக்களின் நிதியுதவியையே நாடும் நிலையில் அவர் இருந்தமை, அவரது நேர்மைக்கும் எளிமைக்கும் சான்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2026-ஆம் ஆண்டு மே மாதம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாற்று அறுவைச் சிகிச்சைக்காகச் சுமார் 70 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக அவர் பொதுமக்களிடம் உருக்கமாக நிதியுதவி கோரியிருந்தார். உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் உறவுகள் குறுகிய காலத்திலேயே அவருக்குத் தேவையான 70 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதியை வழங்கினர்.
தனக்குத் தேவையான 70 இலட்சம் ரூபாய் கிடைத்தவுடனேயே, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், “எனது சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது, இனி யாரும் மேலதிகமாகப் பணம் அனுப்ப வேண்டாம்” என வெளிப்படையாக அறிவித்தார்.
தனது சிகிச்சைக்குப் போக மீதமிருந்த நிதியைத் தனது சொந்தத் தேவைக்காக வைத்துக்கொள்ளாமல், தன்னால் இயன்றவரை மற்றவர்களின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளுக்கும், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த தேவைகளுக்கும் வழங்கினார்.
2013-ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, ஏனைய உறுப்பினர்களைப் போலல்லாமல், இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கடற்கரையோர ஆலயமொன்றில் வைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். போரில் உயிரிழந்த மக்களுக்குச் செய்யும் மரியாதையாக இதனை அவர் மேற்கொண்டார்.
2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தென்னிலங்கையின் பெரும்பான்மை மாவட்டமான குருநாகலில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டார்.
2009-ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தென்னிலங்கை மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று குரல் கொடுப்பதற்காகவே இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்.
வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்த அவர், தனது அரசியல் பயணத்தின் இறுதிக்காலத்திலும் 2025-ஆம் ஆண்டு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டு, தான் பிறந்த மண்ணுக்குச் சேவையாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.
பல தடவைகள் இராணுவம் மற்றும் துணை ஆயுதக் குழுக்களின் பல கொலை முயற்சிகளிலிருந்தும், குண்டுத் தாக்குதல் திட்டங்களிலிருந்தும் உயிர் தப்பியபோதும், கைதுகள் மற்றும் நீதிமன்றத் தடைகளைப் பொருட்படுத்தாமல் நினைவேந்தல் நிகழ்வுகளிலும், மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் தனி ஒருவனாக நின்று குரல் கொடுத்த துணிச்சல் மிக்கவராகவும்
தனது கொள்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமலும் நின்றவர்.
1998-ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றிய அவர், சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ஆம் ஆண்டு மீண்டும் தனது சொந்த ஊரின் நகர பிதாவாகத் தெரிவு செய்யப்பட்டு
தான் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணின் நகர பிதாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், கார்த்திகை மாதத்தில் விடைபெற்றுச் சென்றார்.




