Home புதினங்களின் சங்கமம் நாமல் அந்த இடத்தில் தன்னுடையதை வைத்தாரா? பரிசோதனைக்கு உத்தரவு!

நாமல் அந்த இடத்தில் தன்னுடையதை வைத்தாரா? பரிசோதனைக்கு உத்தரவு!

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இவ்வழக்குத் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோதிலும் (வேறு வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள) சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதன் உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்தில் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில்; “இவ்விசாரணை தொடர்பாகக் கொழும்பு பிரதேச செயலாளர், முன்னாள் காணி ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கோட்டை ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் கையளித்தமை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்குடன் தொடர்புடைய ஆவணமொன்றில் காணப்படும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்து குறித்து ஆய்வு செய்வதற்காக, குறித்த ஆவணம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வை முன்னெடுப்பதற்குக் குறித்த ஆவணத்தின் மூலப் பிரதியை (Original) இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கோரியுள்ளதாகவும் அவர் மன்றில் சுட்டிக்காட்டினார்.

குறித்த மூல ஆவணம் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 07ஆம் இலக்க அறையிலுள்ள வழக்குக் கோவையில் இருப்பதால், அதனைப் பெற்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான உத்தரவைக் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 07ஆம் இலக்க அறைப் பதிவாளருக்குப் பிறப்பிக்குமாறும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதான நீதவான், “இன்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் இக்கோரிக்கை உள்ளடக்கப்படவில்லை” எனச் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் தினமொன்றில் இக்கோரிக்கையை மன்றில் முன்வைத்து அதனை உறுதிப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இவ்வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அதுவரை சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னணி: கொழும்பு, ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியொன்றைப் பல்நோக்குத் திட்டமொன்றுக்காக இந்தியாவின் ‘கிரிஷ்’ நிறுவனத்திற்கு வழங்குவதில், 70 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments