வெல்லவாய – எல்ல வீதி, இரண்டரைக் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதும் 11 மாதங்களும் நிரம்பிய சிறுமியைச் சட்டபூர்வப் பாதுகாவலர்களிடமிருந்து கடத்திச் சென்று வன்புணர்ந்த இளைஞரொருவர், புத்தல பொலிஸாரால் வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது மகள் காணாமல் போயுள்ளதாகச் சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், புத்தல – கோனகங்ஆர பகுதியிலுள்ள குறித்த இளைஞரின் வீட்டிலிருந்த போது சிறுமியும் அவரது காதலனும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய, தனக்குச் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 7ஆம் திகதி தனது காதலனுக்குத் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்திய அவர், மருந்து வாங்குவதற்காக 06ஆம் கட்டைப் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கமைய மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த காதலன், சிறுமியை ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த வேளை, வீட்டிற்கு வெளிப்புறமாக மண்ணினால் அமைக்கப்பட்டிருந்த அறையொன்றில் அவர்கள் இருவரும் கணவன் – மனைவியைப் போன்று குடும்பம் நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் காதலனான, கோனகங்ஆர 21ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த சமன் என்ற 29 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காகப் புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் புத்தல மற்றும் கோனகங்ஆர பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





