வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷலாகே நிலூகா ராஜபக்ஷ என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, அவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.எனினும், அவர் வெளிநாடு சென்றது முதல் கடந்த 14 ஆண்டுகளாக அவரைப் பற்றிய எவ்வித உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை என அவரது குடும்ப உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண்ணைக் கண்டறியும் நோக்கில் அவரது உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பலமுறை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.இதற்கமைய, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், 14 ஆண்டுகளாகக் காணாமல் போயுள்ள நிலூகா ராஜபக்ஷவுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
எனவே, குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், அவரைக் கண்டறிய உதவுமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.





