யாழ், வடமராட்சி, துன்னாலை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளுக்கு அப்பாவான காவாலி ஒருவன் பருத்தித்துறையில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட காவாலி பொலிசாரிடம் சரணடைந்த நிலையில், அவனை ஒரு நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி இரவு பருத்தித்துறை, 1ஆம் கட்டை பகுதியில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பலால் காவாலி ஒருவன் வெட்டிக்கொல்லப்பட்டான்.
3 பிள்ளைகளின் தந்தையான 33 வயதான ஜெயசீலன் ஜெனஜதன் என்ற காவாலியே கொல்லப்பட்டான்.
இந்த கொலை துன்னாலை தெற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த இரண்டு காவாலிக் குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வரும் குழு மோதலின் தொடர்ச்சியாகும்.
இந்த தொடர் மோதலில் பல வாள்வெட்டுச்சம்பவங்கள், பயங்கரமான காயங்கள், நீதிமன்ற வழக்குகள் என நீண்ட பட்டியலில் இப்போது ஒரு கொலையும் சேர்ந்துள்ளது.
துன்னாலை தெற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த இரண்டு காவாலித் தரப்புக்கிடையில் நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதில் சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விடயம்- இரு கிராமத்தையும், குழுவையும் ஒரு வீதி (நெல்லியடி- கொடிகாமம் வீதி) மட்டுமே பிரிக்கிறது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, இந்த வருட ஆரம்பத்தில், தற்போது கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தரான காவாலியின் மூத்த சகோதரனான காவாலி மீது, எதிர்தரப்பினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவனது கை விரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. அந்த விரலையும் எடுத்துக்கொண்டு காவாலிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர், நெல்லியடி பொலிசாரால் தாக்குதலாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கையடக்க தொலைபேசியில், துண்டாடப்பட்ட விரலின் புகைப்படம் இருந்தது.
தாக்குதலாளிகள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, சில மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விரல் துண்டாடப்பட்டவரின் தரப்பினர், அந்த தாக்குதலுக்கு பழிவாங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தாக்குதலாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலையில்,, தாக்குதலில் ஈடுபட்ட ஒருவனின் தம்பி, தனது மனைவியை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்ற போது, கோவில்சந்தை பகுதியில் வைத்து, தாக்கப்பட்டான். அவனட முன்னைய விரல் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவன் அல்ல.
அன்றைய வாள்வெட்டு சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், அந்த நபர் மீது சரமாரியாக வெட்டினார்கள். அவனது கை, கால்களில் 41 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
படுகாயமடைந்தவன், அதிர்ஸ்டவசமாக பிழைத்துக்கொண்டான். ஆனால் அவனால் முன்னரை போல நடமாட, கையை தூக்க முடியாத துரதிஸ்டமான நிலைக்குள்ளானான்.
இதன் பின்னர், தற்போது கொல்லப்பட்டவனும், அவனது இரண்டு சகோதரர்களும்- தாமே அந்த வாள்வெட்டை நிகழ்த்தியதாக குறிப்பிட்டு, நெல்லியடி பொலிசில் சரணடைந்தனர். அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சில வாரங்களின் முன்னர்தான் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பிணையில் வந்த ஒருவர் மீதே கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அன்று இரவு வீடொன்றிலிருந்து சாராயம் அருந்திக் கொண்டிருந்த .பின்னர், 1ஆம் கட்டை பகுதியிலுள்ள இரவுக்கடைக்கு சென்ற போது இந்த கொலை சம்பவம் நடந்தது. எதிர்த்தரப்பு நூதனமாக அந்த குடும்பஸ்தரை அங்கு வரவழைத்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரிக்கிறார்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மோட்டார் சைக்கிளில் வருவதும், இருவர் வாளுடன் இருப்பதும், ஒருவர் வெட்டுவதும் சிசிரிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
இதில் தொடர்புடைய 4 பேர் முதலில் கைதாகினர். அவர்களில் இருவருக்கு 17 வயது. அவர்கள் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏற்கெனவே மனைவியுடன் சென்ற போது வாள்வெட்டுக்கு இலக்காகி நடமாட சிரமப்படுவனும், கைதானவர்களில் ஒருவர். அவனது 17 வயது தம்பியே, கொல்லப்பட்டவரை வெட்டினான். தனது அண்ணன் மீது எப்படி தாக்குதல் நடத்தப்பட்டதோ, அதே பாணியில் அவனது கை, கால்களில் சரமாரியாக வெட்டினான்.அதிக இரத்தப் போக்கு காரணமாக அவன உயிரிழந்தார்.
ஏற்கெனவே வாள்வெட்டுக்கு இலக்காகி நடமாட சிரமப்படுவனும், கைதாகியிருந்தான். தன்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியவன், வாள்வெட்டு தாக்குதலில் எப்படி அவஸ்தைப்படுகிறான் என்பதை நேரில் பார்ப்பதற்காகவே அங்கு சென்றதாக அவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 4வது சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று பருத்தித்துறை பொலிசாரிடம் சரணடைந்தான். அவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளான்.





