இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 2 க்கு ஆட்சேர்ப்புச் செய்தமையில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என்று அபேட்சகர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட பதவிக்குப் புதிய விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கும், அந்தப் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கும், அந்தப் பதவிக்கு வேறு ஆட்களை நியமிப்பதற்கோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்பை விளம்பரப்படுத்தவோ கூடாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு இன்று திங்கட்கிழமை மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பி.சசி மகேந்திரன் மற்றும் ஆதித்யா பட்டபென்டினகே ஆகியோரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், மருத்துவத் துறையில் காணப்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காகக் கோரப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தனது தகுதி, தராதரங்களைப் புறந்தள்ளி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அபேட்சகர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதிகள் வழக்கு நிறைவுக்கு வரும் வரை நிவாரணங்களை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணைவேந்தர், பதிவாளர், மருத்துவ பீடாதிபதி, மருத்துவத் துறைத் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.





