புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் கோவில் அன்னதான உணவு சரியில்லை எனக் கூறியதால் மோதல்! வாள்வெட்டில் 4 பேர் காயம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அன்னதானம் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொண்ட இளைஞர் ஒருவர் உணவு சரியில்லை எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கியவர்களுக்கும் குறித்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுமார் ஏழு பேர் கொண்ட குழுவினர் அன்னதானம் வழங்கியவர்களை வாள்களால் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x