மட்டு வாகரையில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அடித்துக்கொ லை செய்த கணவன்
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்சேனை பகுதியில் இன்று (24) அதிகாலை குடும்பத்தகராறு காரணமாக இளம் பெண்ணொருவர் அவரது கணவரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பால்சேனை கிராம சேவகர் பிரிவு பெரிய சுவாமி ஆலய வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண் காளிராசா மனோஜினி (24) எனவும் தெரிவிக்கப்படுகிறது சம்பவத்தை நிகழ்த்திய கணவர் 24 வயதான கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
குடும்பத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த தம்பதியினர் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பல தடவைகள் குடும்பத்தகராறுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற நேற்றிரவு கொலை செய்யப்பட்ட பெண், அவரது கணவர் மற்றும் பெண்ணின் அம்மம்மா ஆகிய மூவரும் குறித்த வீட்டில் உறங்கியுள்ளனர்.
அதிகாலை வேளையில் அம்மம்மா தனது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை அவரது கணவர் தாக்கிக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மாவட்ட குற்றத்தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, மாவட்ட நீதிமன்றம் வாழைச்சேனை மேலதிக நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். அதற்கமைய ச*டலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை, தனது மனைவியைக்கொலை செய்துள்ளதாக கணவர் வாகரை பொலிஸாரிடம் தெரிவித்ததைத்தொடர்ந்து, அவரைக் குறித்த வீட்டிலேயே வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரையும் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், அதனை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





