யாழ் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது!! விதானையை தாக்கிய சம்பவம்!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பிலேயே கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரதேச செயலாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இளங்குமரன் எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டாரா?
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு இளங்குமரன் எம்.பிக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்றையதினம் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகரான தன்னை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தாக்கியதாக குறித்த கிராம சேவகர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேய நீதிமன்றம் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை இன்றையதினம் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்புகொண்டு கேட்ட போது,
கிளிநொச்சி பொலிஸார் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக எனக்கு தெரியவந்த நிலையில் சட்டத்தரணி ஊடக அந்த வழக்கிற்கான நகர்த்தல் பத்திரத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அந்தவகையில் அந்த வழக்கானது இன்றையதினம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி பொலிஸார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் எனக்கு பணிப்புரை விடுத்தது.
பொலிஸார் என்னை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது என்ற தவறான செய்தி பரவுகிறது. அது முற்றுமுழுதான பொய் என்றார்.

