புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்று எதிரொலி: பருத்தித்துறை நகரில் உணவகங்களுக்கு திடீர் கட்டுப்பாடு!

பேலியகொட கொத்தணி கொரோனா தொற்றுடன் தொடர்புபட்டு வடமராட்சியில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதர-பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பருத்திதுறை உணவகங்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சென்ற சுகாதார பரிசோதகர் தரப்பினரால் திடீர் கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி இராஜகிராமம் முடக்கப்பட்ட நிலையிலும் அங்கிருந்தவர்கள் கட்டுப்பாடுகளை மீறி நேற்றைய தினம் வடமராட்சியின் பல பகுதிகளிலும் நடமாடியுள்ளதாக கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில் வாடிக்கையாளர்களை உள்வாங்கி உணவு, தேனீர் உள்ளிட்ட எதனையும் வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், பொதி செய்யப்பட்ட உணவுகளை மட்டும் வழங்குமாறு சுகாதரப் பரிசோதகர் தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கட்டுப்பாட்டை வலியுறுத்தரிய சுகாதாரப் பரிசோதகர் தரப்பினர் தாமே உணவகங்களில் உள்ள மேசைகள் உள்ளிட்டவற்றால் கடைகளின் வாசல்களை மறிக்கும் வைகையில் ஏற்பாடுகளை செய்து அதனை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்திச் சென்றதாக அறிய முடிகிறது.

வழக்கமான உணவக செயற்பாடுகளுக்கு அமைவாக தாம் உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கு உரிய பொருட்களை தயார் செய்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை நகரில் உள்ள பல வியாபார நிலையங்கள் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக வாடிக்கையாளர்களை அணுகிவருவதையும் அவதானிக்க முடிகிறது.

அவ்வாறான வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணிந்து கைகளை தொற்று நீக்கம் செய்த பின்னரே வாடிக்கையாளர்களுடன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.