புதினங்களின் சங்கமம்

நாளை திட்டமிட்டவாறு உண்ணாவிரதப் போராட்டம்.!! மாற்று இடத்தில் ஏற்பாடு..!! தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டாக அதிரடி அறிவிப்பு..!!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என தமிழ் தேசியக் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.நீதிமன்ற தடைக் கட்டளையைத் தொடர்ந்து கூடிய தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நீதிமன்றத் தடையைத் தொடர்ந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த என்.ஸ்ரீகாந்தா ‘தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள்கூடி நாளை காலை தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம்.ஆனாலும், இன்று மதியம் வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்பித்து தடைக்கட்டளை ஒன்றைப் பெற்றிருக்கின்றனர். கொரோனா ஆபத்தைச் சுட்டிக்காட்டி பொலிஸார் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்தக் கட்டளையை வழங்கியிருக்கின்றது.இந்தத் தடைக் கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாதபோதும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கே தடைக்கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம்.இந்தப் பின்னணியில் திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடர்பாக ஒரு திட்டவட்டமான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம். அதனடிப்படையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் அதற்கான மரியாதைகளுடன் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு போராட்டம் நடத்தப்படும்.இதேவேளை, முன்னர்அறிவித்ததைபோல் 28ஆம் திகதி வடக்கு கிழக்குத் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.