காணாமல் போன பிள்ளைகளை தேடி அலைந்த பெற்றோரின் பரிதாப நிலை… இரு உயிர்கள் பிரிந்தன!!
பெற்ற பிள்ளைகளை தேடி அலைந்த பெற்றோரின் பரிதாப நிலை…
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி வந்த திருகோணமலையை சேர்ந்த ஒரு தந்தையும் கிளிநொச்சியை சேர்ந்த தாயார் ஆகிய இருவரும் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வசித்து வந்த சின்னையா கண்ணம்மா (வயது 77) என்ற தாயார் இறுதி யுத்தத்தின் போது தனது 23 வயதான பிரசாந் என்ற மகனை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். 10 ஆண்டுகளாகியும் தனது மகன் வருவார் என்ற நம்பிக்கையில் போராட்டங்களிலும் விசாரணைகளிலும் கலந்து கொண்டு தனது மகனை தேடி வந்தார்.
இவரது கணவர் இறந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தனக்கான வருமானத்திற்காக கோவில்களில் கச்சான் விற்று குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று திருகோணமலை பாலையூற்றை சேர்ந்த சின்னையா சச்சிதானந்தன் (வயது 74) என்பவர் தனது மகனை கடந்த 11 வருடங்களாக தேடி வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இதுவரை தமது உறவுகளை தேடி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



