கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர், குற்ற விசாரணைப் பிரிவில் இன்று மாலை முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண் பணியாளரை நாளை (டிசெ. 9) திங்கட்கிழமைக்கு முன்னர் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், நாளை அவர் நாட்டைவிட்டு வெளியேறவும் நீதிமன்றம் பயணத்தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் தனது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் கடந்த நவம்பர் 26ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“2019 நவம்பர் 25 ம் திகதி சுவிஸ் தூதரகத்தின் இலங்கைப் பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,
அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கததால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் உள்ளது எனவும் அவரை வாக்குமூலம் வழங்க குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறும் வெளிவிவகார அமைச்சுக் கேட்டிருந்தது.
அத்துடன், குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் அவ்வாறான சம்பவம் இன்று அந்த இடத்தில் குறிப்பிட்ட கால எல்லையில் நடைபெறவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சுக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் அந்தப் பெண் பணியாளர் வாக்குமூலம் வழங்கும் நிலையில் இல்லை என்றும் அவர் உள ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சுவிட்சர்லாந்து தூதரகம் பதிலளித்திருந்தது. அத்துடன், அவரை சுவிட்சர்லாந்து அழைத்துச் செல்லும் நடவடிக்கையையும் தூதரகம் முன்னெடுத்தது.
இதனால் அவர் நாட்டைவிட்டு வெளியே தடை விதிக்குமாறும் வாக்குமூலம் வழங்க குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கடந்த வாரம் விண்ணப்பம் செய்தனர்.
குற்ற விசாரணைப் பிரிவின் விண்ணப்பத்தை ஏற்ற நீதிமன்றம் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளரை நாளை திங்கட்கிழமைக்கு முன்னர் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் அன்றுவரை நாட்டைவிட்டு வெளியேற இடைக்காலத் தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண், தனது சட்டத்தரணியுடன் சென்று இன்று மாலை குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்.





