கோட்டபாய ராஜபக்சவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மாவை எம்.பி திடீர் பல்டி!!
நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்த போதிலும் கோட்டபாய ராஜபக்சவே வெற்றி பெற்றுள்ளார். இந் நிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்த்துத் தான் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்மக்கள் ஆதவளித்தனர். மக்களின் அவ்வாறான கோரிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக் கொண்டு அவை தொடர்பிலும் ஆராய வேண்டும்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் அவர் எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அழைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். எதிர்வரும் தினங்களில் இது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக கூட்டமைப்புக் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

