நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயதான இரண்டு பாடசாலை மாணவர்கள், சம வயதான இரண்டு மாணவிகளுடன் தலைமறைவான சம்பவம் தொடர்பில், யாழ் சிறுவர் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களின் முன்னர் இவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
பருத்தித்துறையிலுள்ள பிரபல்யமான ஆண்கள் கல்லூரியில் கல்வி பயிலும் இந்த மாணவர்கள், அருகிலுள்ள பெண்கள் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளுடன் தலைமறைவாகியுள்ளனர். எனினும், தனியார் கல்வி நிலையத்திலேயே இந்த மாணவ ஜோடிகள் காதல் வசப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கரவெட்டி மத்தி பகுதியில் வசிக்கும் சிறுமியொருவரும், அந்த சிறுமியின் தாயாரின் சகோதரியின் மகளான மற்றொரு சிறுமியுமே தலைமறைவாகினர். மற்றைய சிறுமி வரணியை சேர்ந்தவர். எனினும், கல்வி நிமித்தம் அவரும், கரவெட்டி மத்தியில் உள்ள மற்றைய சிறுமியின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
கரணவாயை சேர்ந்த மாணவனும், வரணி- கருக்காயை சேர்ந்த மாணவனுமே அவர்களுடன் தலைமறைவாகியுள்ளனர்.
மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறும் போது, கரவெட்டி மத்தியிலுள்ள வீட்டிலிருந்து சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட சில நகைகளையும் எடுத்து சென்றதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த மாணவ, மாணவிகள் காணாமல் போனது தொடர்பில் நான்கு குடும்பங்களும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளன.
இலங்கை சட்டங்களின் அடிப்படையில் 18 வயதிற்கும் குறைவானவர்கள் திருமணம் செய்ய முடியாது. எனினும், 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூடி வாழலாம். ஆயினும், 18 வயதிற்கு குறைவானவர்களிற்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிற்கு தெரியாமல் தங்குமிடம் அளிப்பது குற்றச்செயலாகும்.





