நைனாமடம் பகுதியில் வேலை செய்யும் அசோக் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டான்!!
மாரவில, மூதுகட்டுவ கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் பாரிய கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுள்ளது.
வென்னப்புவ – நைனாமடம பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஐவரைக் கொண்ட இளைஞர் குழுவினர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காகச் சனிக்கிழமை (22) மாலை மாரவில கடற்கரைக்கு வந்துள்ளனர். மாலை 6:00 மணியளவில் இவர்கள் கடலில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தபோதே, திடீரென வந்த இராட்சத அலை இரு இளைஞர்களை இழுத்துச் சென்றுள்ளது.
அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர்களைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கடலில் குதித்து, ஒருவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும், மற்றைய இளைஞர் கடல் அலைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
இவ்வாறு மாயமான இளைஞர், தொடாங்கொட – யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த எதிரிசூரிய கமகே பெதும் தெநெத் அசோக (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாயமான 18 வயது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காகப் பிரதேச மீனவர்கள் உடனடியாகப் படகுகளில் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதிலும், கடலின் கொந்தளிப்பான தன்மை மற்றும் பலத்த காற்று மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

