புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் தாயினால் கொடூர சித்திரவதை அனுபவித்த சிறுமி!!! (Photos)

கையில இருக்குற காயம்…? போன கிழம சூடு வெச்சது…”

”தோள் பட்டையில் இருக்குறது…? போன மாசம் வச்சது…”

”அப்போ காலில இருக்கிறது…? போன வருசம் வச்சது…”

”இந்தக் காயம்…. அது இரண்டு வருசத்துக்கு முதல் வெச்சது…”

சிறுமி தன் உடல் முழுதும் இருக்கும் இரத்தம் கசிந்த காயங்களையும் ஆறிப் போன தழும்புகளையும் காட்டிக் கொண்டே போகிறாள்… சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருப்போரின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டிக் கொண்டே போகிறது…

இது களுவாஞ்சிக்கடி வைத்தியசாலையில் நடந்த சம்பவத்தின் சில காட்சிகள்… இந்தக் கொடுமையின் பின்னணி என்ன? கொடுமைப்படுத்தியது யார்? இப்போது அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய விபரங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமது குழந்தைகளிடமே தமது வக்கிர வன்முறை புத்திகளை காட்டி எதிர்காலத்தில் அவர்களை இந்த நாட்டில் ஒரு குற்றவாளியாகவோ சமூகத்திற்கு எதிரானவர்களாகவோ உருவாக்கும் பெற்றோரும் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

தான்பெற்று வளர்த்த பிள்ளையினையே தாய் ஒருவர் சூடுவைத்து வந்த இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

11வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமியே தாயினால் இரும்புக்கம்பினை காய்ச்சி சூடுகள் வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியினை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பொலிசார் வருகை!

இதனையடுத்து விடயம் வைத்தியசாலை மூலமாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றதுடன் சிறுமியின் தந்தை மற்றும் தாயிடம் மறுநாள் சனிக்கிழமை வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

வழக்குத் தாக்கல்
.

பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதும் சிறுவர்களை பாதுகாத்துள்ளதும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதேபோன்று சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகிறது.

நமது பணி என்ன?

இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசத்திலும் நாடு முழுவதிலும் தொடராக இடம்பெற்று வருவதை நாம் அறிவோம். எனினும் சம்பவம் நடந்த ஓரிரு நாட்கள் அதுபற்றிப் பேசி கவலைப்பட்டுவிட்டு பின்னர் நாமும் நமது பாடும் என்றிருந்து விடுவோம். சிறுமி சீமா ,வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோதும் நாம் இவ்வாறுதான் நடந்து கொண்டோம். அதுபற்றி சூடாகப் பேசிவிட்டு பின்னர் மறந்து போனோம்.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நாளை நமது உறவு பிள்ளைகளுக்கும் நடப்பதற்கு முன்னரே நாம் விழிப்புணர்வோடும் போதிய தற்காப்பு நடவடிக்கைகளுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

1929!

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொது மக்கள் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காகவே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் 1929 எனும் ‘ஹொட் லைன்’ இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 10732 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் ஒன்றை வழங்கினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உடனடியாக முறைப்பாடு கிடைக்கப் பெற்ற பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தகவல்களை வழங்கி இது பற்றி கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்ளும். இதற்கான சகல அதிகாரமும் பிரதேச செயலாளர் ஊடாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எனவே நாம் இது விடயத்தில் விழிப்பாக இருப்பதுடன் நமது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் சக ஊழியர்கள் என சகலரது மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது பிள்ளைகளை பாதுகாப்போம்.

சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக இன்றே அணிதிரள்வோம்.

நன்றி
2018ம் ஆண்டு என்னால் பதிவிடப்பட்ட சம்பவமாகும்.
ரிசிந்தன் நிசாந்த்

Image may contain: one or more people and close-upImage may contain: one or more people and close-up