இலங்கை ஆங்கில ஆசிரியை மேடையில் ஜங்கியுடன் தோன்றினாரா? Fact Check கூறுவது என்ன?
சமீப நாட்களாக, இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர்.
ஆனால், மேற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானதும் தவறாக வழி நடத்துவதாகவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் இலங்கையர் அல்ல; இலங்கை வம்சாவளியினரும் அல்ல. அவர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், பிரபலமான சில நபர்களும் இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அதன் விளைவாக, உண்மை வெளிச்சத்துக்கு வரும் வரை, பலர் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது எவ்வளவு அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.



