ஓரினசேர்க்கை விவகாரத்தில் பணம் கொடுக்காததால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை!
ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் பணம் கொடுக்காததே காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவில் பணியாற்றி வந்த சுரேஷ்குமார் கடந்த 1 ஆம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஐதரபாத் போலீசார், சுரேஷ் குமாரை கொலை செய்ததாக லேப் டெக்னீசியன் ஒருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் அன்ஜனி குமார், சீனிவாஸ் என்ற அந்த நபருக்கும், சுரேஷ்குமாருக்கும் உடல் ரீதியான தொடர்பு இருந்துள்ளதாக கூறினார்.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பணபரிமாற்றம் இருந்துள்ளதாகவும், பணம் தரவில்லை என்பதாலேயே சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொலையாளியிடம் இருந்து விஞ்ஞானி சுரேஷ்குமார் அணிந்திருந்த தங்க மோதிரம், கொலைக்கு பயன்படுத்தி ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சிசிடிவி கேமரா, செல்போன் அழைப்புகள், ரத்த மாதிரியைக் கொண்டு கொலையாளியை கண்டுபிடித்ததாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

