வரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!
மாலபே பகுதியில் உள்ள தானசாலை ஒன்றில் வரிசையில் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 16 மற்றும் 17 வயதுடைய 5 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொசன் பூரணை தினத்தன்று மாலபே நகரில் உள்ள தானசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து, இளைஞர் ஒருவரை ஒரு குழுவினர் தலைக்கவசங்களால் தாக்கி, கைகளாலும் கால்களாலும் உதைத்துத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று(30) மாலபே காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் சந்தேகநபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கமைய, அன்றைய தினமே கொட்டலாவல, பட்டியவத்தை வீதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் மாலபே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மாலபேவில் உள்ள உணவு தானசாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது, வெளியில் இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் வரிசையில் இணைய முயன்றுள்ளனர்.
அப்போது, தமக்கு பின்னால் வந்து வரிசையில் நிற்குமாறு அந்த இளைஞர் கேட்டுக்கொண்டதே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாலபே காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

