நமுனுகுல பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது பாடசாலை மாணவியிடம் பாலியல் துன்புறுத்ள் செய்ய முயன்ற நபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாவது,
நேற்று (30) பல்லகெட்டுவ பகுதியில் உள்ள பாடசாலை முடிந்த பின்னர் குறித்த மாணவி தனது சகோதரருடன் பேருந்தில் நமுனுகுல நகருக்கு வந்து, அங்கிருந்து கனவரெல்ல சி.வி. 2 வீதியூடாக நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததாகக் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, மாணவியின் பின்னால் சென்று அவரைக் கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறல் செய்ய முயன்றுள்ளார். இதன்போது மாணவியும் அவரது சகோதரரும் சத்தமிட்டு கூச்சலிட்டதால், குறித்த நபர் மாணவியை விடுவித்து அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்த மாணவியும் மாணவியின் சகோதரனும் பொலிஸாருக்கு வழங்கியதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாக, நமுனுகுல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் வசந்த ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





