யாழ் பாடசாலைகளில் பிள்ளைகள் புறோய்லர் கோழிகளை விட மோசமாக அடைக்கப்பட்டுள்ளார்கள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
யாழ் பாடசாலைகளில் பிள்ளைகள் புறோய்லர் கோழிகளை விட மோசமாக அடைக்கப்பட்டு துயரப்படுத்தப்படுகிறார்கள். எங்களால் பாடங்களை நடத்த முடியாமல் உள்ளது காரணம் எங்கள் பிள்ளைகள் வேதனைப்படுகிறார்கள். தற்போது நிலவும் கடுமையான வெப்ப காலநிலை. அனைத்து வகுப்புகளிலும் மின்விசிறிகள் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவற்றில் 10% கூட ஒழுங்காக வேலை செய்வதில்லை காரணம் பழுதடைந்துள்ளன. பிள்ளைகளை அவதானிக்கும் போது அவர்களின் சீருடைகள் வியர்த்து வியர்வையால் நனைந்து இருப்பதை பார்க்கும் போது ஒரு தந்தையாக என் மனம் வேதனையடைகிறது. 3 வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் முன்னனி தனியார் பாடசாலைகளில் ஒன்றுடன் கிரிக்கெட் ஆட வேண்டிய சந்தர்ப்பம் எங்கள் கல்லூரிக்கு ஏற்பட்டது. எங்கள் அணிக்கு நான் பொறுப்பாசிரியராக சென்றிருந்தேன். நாங்கள் அந்த கல்லூரியை கிட்டத்தட்ட இரவு 11 மணியளவில் சென்றடைந்திருந்தோம். அந்த நேரம் எனது பிள்ளைகளில் பெரும்பாலானோர் தூக்கம். அவர்கள் 13 வயதிற்குட்பட்ட அணி நாங்கள் அவர்களை செல்லமாக Baby Team என்றே அழைப்பதுண்டு. குழந்தைகளை செல்லமாக தட்டியெழுப்பி அவர்களை வரிசைப்படுத்தி கல்லூரி வாயிலூடாக உள்ளே சென்றுகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பின்னால் இருந்து ஒரு சத்தம் “சேர் ஒருக்கா இங்க வாங்கோ” நான் அங்கு சென்றேன். பாதுகாப்பு அலுவலர் எங்கள் வாகன சாரதிகளுக்கு உள்ளே போக அனுமதி கொடுக்கவில்லை. நான் ஏன் என்று அந்த ஊழியரிடம் கேட்டேன் அவர் எனக்கு தந்த பதில் மிகவும் வியப்பாக இருந்தது. அதுவரை எங்கள் தாய்மார் எங்கள் பாடசாலைக்குள் வரும்போது சேலை மட்டும் தான் அணிந்து உள்ளே வரவேண்டும் என்ற விதியை கடுமையாக நடைமுறைப்படுத்துபவர்கள் நாங்கள். ஆனால் அன்று அந்த பாதுகாப்பு ஊழியர் எனக்கு இவ்வாறு கூறினார் ” சேர் இவர்கள் இருவரும் சாரம் அணிந்துள்ளார்கள் எங்கள் கல்லூரிக்குள் சாரம் அணிந்து உள்ளே வர முடியாது” என. ஒரு வினாடி திக்குமுக்காடிப் போனாலும் மறுநொடி சுதாரித்துக்கொண்டு என்ன செய்வது ஏனெனில் அந்த இரண்டு சாரதிகளும் எங்களை பாதுகாப்பாக இவ்வளவு தூரம் அழைத்து வந்தவர்கள் அந்த நன்றியுணர்வு ஒரு பக்கம் உந்தித்தள்ள அவர்களில் ஒருவர் என்னிடம் கூறினார் “சேர் நாங்கள் வாகனத்திலேயே நித்திரை செய்கிறோம் நீங்கள் பிள்ளைகளை கொண்டு உள்ளே செல்லுங்கள்” எனக்கு மிகவும் கவலையாக இருந்த போதும் அந்த கல்லூரியின் விதியை மதித்து பிள்ளைகளுடன் உள்ளே சென்றேன். வாகனத்தில் தரித்து நின்ற எங்கள் சாரதிகளுக்குரிய இரவு ஆகாரம் சென்றடைந்ததா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அது மிகவும் அழகான கல்லூரி. அடுத்த நாள் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த பாடசாலையை சற்று சுற்றிப்பார்க்கத் தோன்றியது. அந்த வகுப்பறைகள் மூடப்பட்டிருந்தது . யன்னல் கண்ணாடிகளால் உள்ளே ஏறெடுத்துப் பார்த்த போது மிக மிக அழகாக காட்சியளித்தது. குறிப்பிடத்தக்க விடயம் அனைத்து வகுப்பறைகளும் AC போடப்பட்டு Smart Board உடன் காணப்பட்டன. எங்கள் வகுப்பறைகளை இப்போது நினைக்கும்போது இதயம் கணக்கிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள். மனித உரிமை ஆணைக்குழுக்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழுக்கள் தற்போது வரிந்து கட்டலாம் ……”முடிந்தால்”

