மலேசியாவில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான மனைவி! நடந்தது என்ன?
பிரித்தானிய பிரஜையான 40 வயதான ஜனார்த்தனம் விஜயரட்ணம் என்பவர் கடந்த 14 ம் திகதி மலேசியாவில்பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜனார்த்தனம் விஜயரட்ணம் பயணம் செய்த காரை மலேசிய பொலிஸார் துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது ஜனார்த்தனனும் அவரது உறவினரும் மலேசிய பிரஜையொருவரும் கொல்லப்பட்டனர்.
இதேவேளை ஜனார்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தவேளையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
இதேவேளை ஜனார்த்தனன் மனைவி காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மலேசியா செலங்கூரிற்கு அருகில் காரை நிறுத்துமாறு தாங்கள் உத்தரவிட்டபோது, காரில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதை அடுத்து தாமும் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவரும் கொல்லப்பட்டதாகவும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனார்த்தனனின் குடும்பத்தவர்கள் மலேசிய பொலிஸார் தெரிவிப்பதை நிராகரித்துள்ளதோடு, மலேசிய பொலிஸார் முக்கிய விடயங்களை மறைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுட்டுக்கொல்லபட்ட மூவரின் மார்புபகுதியிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுகின்றதாக கூறியுள்ளதாக ஜனார்த்தனனின் குடும்பத்தினரின் சட்டத்தரணி பொன்னுசாமி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலேசியன் பொலிஸார் ஜனார்த்தனம் உள்ளிட்டவர்களை துரத்திச்சென்றதாகவும், சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் தாங்கள் திருப்பி தாக்கியதாகவும் தெரிவிக்கின்ற நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதியில் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வழமையாக பொலிஸார் தெரிவிக்கும் கதை என்றும் இந்த கதையில் எந்த பொலிஸாருக்கும் காயம் ஏற்பட்டிருக்காது, எனக்கூறிய சட்டத்தணி, இவ்வாறான சம்பவம் அதிகாலையில் ஒதுக்குபுறமான இடத்தில் நிகழ்ந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை மலேசிய பொலிஸார் பல விடயங்களை தெளிவுபடுத்தவில்லை என ஜனார்த்தனம் விஜயகுமாரின் நண்பர் சுரேஸ்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
துரத்தப்படும் காரில் இருப்பவர்களை எப்படி நெஞ்சில் சுட்டுக்கொல்ல முடியும்,எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை நான்காவது நபர் ஒருவரும் காணப்பட்டதாகவும், ஆனால் அவர் காலில் காயங்களுடன் காடுகளிற்குள் தப்பிச்சென்றுவிட்டதாக மலேசிய பொலிஸார் தெரிவித்ததாக ஜனார்த்தனம் குடும்பத்தவர்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் பொலிஸார் அதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அந்த நான்காவது நபர் ஜனார்த்தனம் விஜயரட்ணத்தின் மனைவி மோகனாம்பாள் கோவிந்தசாமியா என கேள்வி எழுப்பியுள்ள குடும்பத்தவர்கள் மோகனாம்பாள் சுட்டுகொல்லப்பட்ட மூவருடனும் இரவு உணவு அருந்தியிருந்த பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
விஜயரட்ணத்தின் மனைவி மலேசியவை சேர்ந்த பிரித்தானிய பிரஜை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் காணாமல்போன மோகனாம்பாள் தனது சகோதரிக்கு அன்றிரவு தான் பயணம் இடம் குறித்த ஜிபிஎஸ் பதிவினை அனுப்பியதாக கூறியுள்ள மோகனாம்பாளின் சகோதரி வழமைக்கு மாறாக அவர் அதனை அனுப்பியுள்ளார் என்றும், ஆபத்தில் காணப்பட்டதாலேயே அவர் அவ்வாறு செய்துள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

