பதவிக்காலத்தை கோருவதற்கு தயாராகும் மைத்திரி:தேர்தல் பிற்போடப்படுமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி பதவிக்காலம் எப்போது தொடங்கி எப்போது முடிவடையவுள்ளது என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் சட்ட அபிப்பிராயம் ஒன்றை கோருவதற்கான மனுவை சில தினங்களில் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் கடந்த சில தினங்களாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளுடன் பேச்சு நடத்திவருவதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்த நிலையில் 19 ஆவது திருத்த சட்டம் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன்பின்னர் சில வாரங்களில் சபாநாயகரின் கையொப்பமிடப்பட்டது.
அதன்பின்னரே 19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வந்தது. 19ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.
எனினும் தான் 19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வரும் முன்னரே ஜனாதிபதியாக பதவியேற்றதால் தான் எத்தனை வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்பதை ஏற்கனவே ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையில் ஐந்து வருடங்களே பதவி வகிக்க முடியும் என உயர் நீதிமன்றம் சட்ட வியாக்கியானம் அளித்திருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களாயின் அது எப்போது ஆரம்பித்து எப்போது முடிவடையும் என்பது தொடர்பாகவே ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் சட்ட அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக அறியமுடிகின்றது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி தரப்பினர் இவ்வாறு மீண்டும் ஒருமுறை சட்ட அபிப்பிராயத்தை கோருவது அவசியமற்ற விடயம் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
ஏழு உறுப்பினர்கள் அன்றையதினம் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை. அத்துடன் ஒருவர் 19ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்ததுடன் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நடுநிலைவகித்திருந்தார்.
ஆறு வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த 19ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.
அந்த வகையிலேயே தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களா? அல்லது ஆறு வருடங்களா? என்பதை முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் வினவியிருந்தார்.
அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என சட்ட வியாக்கியானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

