யாழ் கல்வியங்காடு பேக்கரி மனேஜரின் லீலை! யாழ் வர்த்தகர்களின் லீலைகள் இனியாவது அடங்குமா? வீடி யோ
வாங்கோ… வாங்கே… பேஸ்புக்கில் கிளிக்பண்ணி அப்புறம் இணையத்தளத்தில் கிளிக் பண்ணி சிரமப்பட்டு கிசுகிசு பார்க்க வந்த வாசகப் பெருமக்களுக்கும எங்களைப் பற்றி போட்டிருப்பாங்களோ என்ற கள்ளக் குணத்தில் வந்த வர்த்தகப் பெருந்தகைகளுக்கும் முதற்கண் வணக்கங்கள்…. கொஞ்சம் வாசியுங்கோ..அப்புறம் யோசிங்கோ…
இது பேச்சுத்தமிழில் பதிவு செய்யப்பட்டதாகும்…
இண்டைக்கு இரவு பாண்தான் சாப்பாடு என்டு மனிசி முடிவெடுத்து சொன்னால் மறு பேச்சு பேச முடியாது…சலரோக வருத்தம் இருக்குது என்டு சொல்லவும் முடியாது… அப்படி சொல்லி பாணை புளொக் பண்ண வெளிக்கிட்டால் மற்றைய நேரங்களில் நான் சாப்பிடும் கன சாப்பாடுகளை அவள் புளொக் பண்ணுவாள். ஏன் சோலிய என்டு போட்டு நான் மறு பேச்சு பேசாமல் பாண் வாங்கி கொடுத்துடுவன்… பாண் வாங்க வேணடும் என்டவுடன ஞாபகம் வாறது கல்லியங்காட்டு பெற்றோல் செற்றுக்கு முன்னால இருக்கிற றொலைக்ஸ் பேக்கரியைத்தான்…அங்க ஒரு கண்ணாடி போட்ட பெடியன் நிப்பான். அங்க போய் இறங்கினவுடன ”வாங்கோ ஐயா.. எப்படி சுகமா இருக்கிறீங்களோ… நல்ல சந்தோசத்தில இருக்கிறீங்கள் போல இருக்குது.. முகம் பொலிவா இருக்குது.. இப்படி எல்லாம் சொல்லி வரவேற்பான்… என்னை மாத்திரமல்ல.. அந்த பேக்கரிக்கு வாற எல்லாரோடும் நட்பாக கதைத்தே வியாபாரம் செய்வான். எந்த நாயும் என்னை திரும்பிப் பார்க்கமால் இருக்கும் போது இப்படி ஒருத்தன் அன்பா விசாரிக்கிறானே என்டுபோட்டு பாண் வாங்குறது என்டால் அந்த பேக்கரிக்குத்தான் நான் போறது….(இது விளம்பரமில்லை பாருங்கோ. பதிவின் தலைப்பைப் பாருங்கோ. அந்த பேக்கரி முதலாளி எப்படி கொலை வெறியில் இருப்பான் என்று விளங்கும்). ஆட்டோவிலும் சிலர் பாண் கொணடு திரியிறவங்கள். ஆனால் நான் போவது அந்த றொலைக்ஸ் பேக்கரிக்குத்தான்..
“கணபதி ஐயர் பேக்கரி” போலவும் சிலர் பேக்கரி நடாத்துறாங்கள்தான்… ஆனால் பேக்கரி வியாபாரத்தில் கோடீஸ்வரர்களானவர்கள் பலர்.திருநெல்வேலி கொமர்சல் வங்கிக்கு முன் உள்ள தினேஸ் பேக்கரி… ஆணைப்பந்தி சந்தியிலுள்ள அம்பாள் பேக்கரி, வடமராட்சியில் உள்ள பிரபல பேக்கரி ( பெயர் ஞாபக்தில் வரவில்லை) போன்றவை கோடீஸ்வரர்களை உருவாக்கிய பேக்கரிகள் எனலாம்.
போன வருசக் கடைசில வந்த டிக்வா புயலைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கம். அந்தப் புயல் அடிச்சு ஏ9 பாதை போக்குவரத்து ஒரு நாள் தடைப்பட்டது. தின்னவேலிச்சந்தியில இருக்கிற முட்டைக் கடையில பாதை தடைப்படுவதற்கு முதல்நாள் 28 ரூபாவுக்கு விற்ற முட்டை விலை அன்று இரவு பாதை தடைப்பட்டு விட்டது என அறிந்து அடுத்தநாள் 37 ரூபாவுக்கு விற்றது. குறுக்கால போவர் அதே முட்டைப்பெட்டிகளை வைத்து ஒரு இரவுக்குள் 9 ரூபா கூட்டி வித்தாங்கள். ”””“மழை கடுமையா பெய்யுது முட்டையை கையோட வாங்கியாங்கோ“ என்டு முதல்நாள் மனிசி சொல்லியும் வாங்காமல் அடுத்தநாள் முட்டை வாங்கப் போன எனக்கு குறுக்கால போவார் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரி.. இவங்கள் தவிச்ச முயல் அடிக்கிறாங்கள்.. கொஞ்சம் தள்ளிப் போய் பாதை தடைப்பட்டதை இன்னும் அறியாமல் இருக்கும் பேஸ்புக்குகள் பார்க்காத அப்பாவிக்கடைக்காரர்கள் யாராவது இருப்பாங்கள் என்டு நினைத்து பலாலி வீதியால் யாழ் நோக்கி 300 மீற்றர் துாரம் சென்ற போது இடது கைப்பக்கம் இருந்த ஐங்கரன் ஸ்ரோஸ் கடைக்காரனிடம் போய் நின்றேன். இவர் என்னைப் போல பழசுதான்.. பேஸ்புக் பாக்காதவரா இருப்பார். முட்டை பழைய விலைக்க விற்பாா் என்டு எண்ணி ”அண்ணை முட்டை என்ன விலை?” என்டு கேட்டன்..
45 ரூபா என்டார்…. தலை சுற்றியது. உடனே திரும்ப வந்து தின்னவேலிச்சந்தியில இருக்கிற கண்ணன் ஸ்ரோரிலேயே 37 ரூபாவுக்க வாங்கி வந்தேன்.. அறுந்து போன யாழ்ப்பாணத்து கேவலம் கெட்ட வர்த்தகர்கள் முன்னைய கால பழைய பாணியிலேயே இப்பவும் பிசினஸ் செய்யிறாங்கள் என்டு நினைச்ச போது கொலை வெறிதான் வந்தது…
யாழ்ப்பாணத்துல இப்ப இருக்கிற பெரிய பெரிய பிசினஸ் புள்ளிகள் எல்லாரும் யுத்தகாலத்தில தவிச்ச முயல் அடிச்சு அப்பாவிகளின் பணத்தை சுளையாக சுருட்டியவர்கள். யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வியாபாரத் தந்திரம் என்பது அறவே இல்லை எனலாம். விளம்பரங்களைக் கூட அறுந்துபோவர் இப்பவும் பேப்பரிலும் டான் ரீவியிலும்தான் கொடுக்கிறாங்கள் என்டால் பாருங்கோவன்.. ஆருடாப்பா அவற்றை இப்ப பாக்கிறான்…உங்களுக்கு தெரியுமோ என்ட அம்மா 76 வயது கிழவி. பேஸ்புக் ஓப்பின் பண்ணி வைச்சிருக்கு. வட்சப்பில வெளிநாட்டில இருக்கிறவளுகளோட கதைக்கிறா… சண்டையும் பிடிக்கிறா…வட்சப்பில கதைச்சே குடும்பங்களையும் குலைக்கிற வேலையம் பாக்கிறவாதான்…பேஸ்புக்கில வாற விசங்களை எனக்கு சொல்லி எச்சரிக்கிறா என்டால் பாருங்கோவன்… ”பேயன் விசரன் போல திரியாத… தின்னவேலிச் சந்தியில ஒருத்தனை துரத்தி துரத்தி வாளால வெட்டின வீடியோவை பேஸ்புக்கில பார்த்தன்…” என்டு சொல்லுற அளவில கிழவி இருக்கிறா… இவங்கள் இப்பவும் விளம்பரங்களை கூட பழைய பாணியில் போடுறாங்கள்..
நான் கலியாணம் கட்டின புதிது… அந்த நேரம் சரியான சண்டை நடந்த காலம். மனிசி வரலட்சுமி விரதம் பிடிக்கிறன் என்டாள்.. பிடி என்றேன். ஆருக்குத் தெரியும் அதில இருந்த தந்திரம். அதுக்கு புதுச்சாறி வாங்க வேண்டும் என்றாள். ஓகோ… அப்படியோ என்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் யாழில் உள்ள புடவைக்கடைக்கு அவளைக் கொண்டு போனேன்…. இங்க பழைய டிசைனுகள்தான் இருக்குது.. அங்கதான் நல்ல டிசைன் இருக்குது என்டு அவள் தனக்கு தெரிஞ்ச ஒரு கடைக்கு என்னை கூட்டிக் கொண்டு போனாள். அங்க ஒவ்வொரு புடவை செற்களிலும் விலைக்குப் பதிலாக ஒவ்வொரு குறி..XY TP..AP ) போட்டிருந்தார்கள். புடவை விலை என்ன என்று கேட்ட 2 ஆயிரம் ( அந்த நேரம்.. இப்ப 20 ஆயிரம் வரும்) என்டு சொன்னாங்கள். கொஞ்சம் குறையுங்கோ.. கொஞ்சம் குறையுங்கோ என்று மனிசி கெஞ்ச 1500 வரை குறைத்தார்கள். நான் கொஞ்சம் புத்திசாலி போல என்னட்ட 1200 தான் கிடக்குது என்டேன்.. மனைவியுடன் பேரம் பேசலில் ஈடுபட்ட அந்த பெடியன் கடை முதலாளியைப் பார்த்து ”இங்க இது XY ( அந்த குறியீடு). இவரிடம் 1200 தான் கிடக்குதாம். என்ன செய்யிறது என்டு கேட்டான்… உடன முதலாளி..”சரி..சரி.. குடு.. எங்கட வாடிக்கையாளர்தானே” என்று சொல்லி ஒப்புதல் கொடுத்தார். 2 ஆயிரம் சொன்ன புடவையை 1200 ரூபாவுக்கு வாங்கியதை நினைத்து நான் பெருமைப்படலாம். ஆனால் அந்த முதலாளிக்குத்தான் தெரியும் நான் முட்டாள் என்று…
யாழ்ப்பாணத்தில் புடவைக்கடையில் மட்டுமல்ல பாத்திரக்கடைகளில் கூட பாத்திரங்களில் அவ்வாறுதான் குறியீடுகள் குறித்து வைத்து விற்பனை செய்துவருகின்றார்கள். இவ்வாறான வியாபாரிகள் நினைக்கின்றார்கள் இது தமது வியாபார தந்திரம் என்று. நாசமறுத்த தந்திரம்… தற்போதைய உலகம் என்ன நிலையில் உள்ளது? விற்பனைப் போட்டி யுக்திகள் எவ்வாறு உள்ளன? இளைய சமூதாயத்தின் சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன? அவர்கள் எப்படியானவற்றை விரும்புகின்றார்கள்? எவ்வாறான வியாபார யுக்திகளை தற்போது வகுக்க வேண்டும் என்று எந்தவித அடிப்படை சிந்தனையும் இல்லாது யாழ்ப்பாண வர்த்தகர்கள் செயற்பட்டு வருவது அவர்களின் எதிர்கால வர்த்தகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
தற்போது யாழ் நகரில் நதியாஸ், நோலிமிட் என்ற இரு பெரும் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு ஆடைகளுக்கு விலைகள் பொறிக்கப்பட்டு நேர்த்தியாக தொங்கவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருட்களுக்கும் விலைகள் பொறிக்க்படப்டுள்ளன. சில பொருட்களின் கீழ் 20, 10 வீத தள்ளுபடி என்றும் குறிக்கப்பட்ட பேரம் பேசல்கள் இல்லாது மக்கள் பொருட்களை அள்ளுகின்றார்கள். உண்மையில் யாழ் நகரில் உள்ள சில புடவைக்கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் எம்மால் பேரம் பேசி வாங்கி வரும் பொருட்களின் விலைகளை விட குறித்த இரு நிறுவனங்களிலும் விற்கப்படும் விலைகள் மிக உயர்வானது. நதியாஸ் புடவை விற்கும் பகுதியில் ஒரு சாறி பிளவுஸ்க்கு விற்கும் உட் துணி 180 ரூபா( இதுக்கு ஏதோ பெயர் சொல்லுறவள்.மனிசியைத்தான் கேட்கனும்… இப்ப கேட்டால் யாருக்கு வாங்க போறீங்கள் என்டு கத்துவாள்) ஆனால் யாழ் நகரப்பகுதி கடைகளில் 140 ரூபாவாம். மனிசி அண்டைக்கு நதியாஸ்சில வாங்கின பொருளில இதுவும் ஒன்று..அவள் தன்ர சிநேகிதியோட ரெலிபோனில கதைக்கேக்க கேட்டுக் கொண்டிருந்தன்….
படுபாவி.. நதியாஸ் போறதுக்கு மோட்டச்சயிக்கில் பார்க்கிக்கு 50 ரூபா.. அவளோட அந்தக் கடைக்குள்ள அலைஞ்சு திரிஞ்சு கடைசில வெளிக்கடையிலும் பார்க்க கூடின விலைக்கு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள் என்டு யோசிச்சு யாழ்ப்பாணக் கடைக்காரர்களின் விசுப்புளாத்தி தனமான வர்த்தக நடவடிக்கைகளை நினைத்து எரிச்சல் வந்தது தான் மிச்சம்….
கோடிக்கணக்கில சில யாழ்ப்பாண வர்த்தகர்கள் காசுகளை வைத்திருந்தாலும் 10*20 என்ற கோழிக்கூடு போல் உள்ள கடைக்குள்ளதான் எல்லாத்தையும் அடைஞ்சு வைச்சிருப்பாங்கள்.. அங்காலும் போக முடியாது.. இங்காலும் போக முடியாது…இப்ப எல்லாம் அடங்கிப் போட்டுது பாருங்கோ..
வாலிப வயசுல இதுக்கெண்டு சில தடவை நான் புடவைக்கடைக்குள்ள நுழைஞ்சு திரிஞ்சனான்….
இனிமேல் யாழ்ப்பாணத்து நகைக்கடைக்காரர்களுக்கு ஆப்பு வைக்கிறது போலவும் ஒரு கடை திறந்தால் நல்லா இருக்கும். குறுக்கால போவார் கடைசிகாலம் சரியா கஸ்டப்பட்டுத்தான் சாவார்கள் என்டுதான் திட்ட வேணும். நெருங்கின உறவின் கலியாண வீ்ட்டுக்கு நகை போட வேணும் என்ற நெருக்கடி.. காசு கையில இல்ல. என்ர கடைசி மகனிட சிறுவயது காப்பு, மோதிரங்களை கொண்டு கடைகடையா விற்க அலைஞ்சன்… அந்த நகைகளை வாங்குவதற்கு ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலைக்கு கேட்டாங்கள்… நினைச்சுப்பாருங்கோ.. பொருள் ஒன்று… விலை பல. அதுக்கிடையில இது பழைய நகை.. சேதாரம் கூட.. ( தங்கத்தில என்னடா பழை தங்கம் புது தங்கம்ஃஃஃ றாஸ்கல்ஸ்) இப்புடியெல்லாம் சொல்லுறாங்களப்பா…
யாழ் நகரப்பகுதிகளில் உள்ள பிசியான ஹாட்வெயார் கடைகளுக்கு போய்ப்பாருங்கோவன்.. இல்லாட்டி ஸ்ரான்லி வீதியில் உள்ள ஏதாவது ஒரு கடைக்கு போய்ப் பாருங்கோவன்… உங்களை யாராவது திரும்பிப் பார்க்க மாட்டாங்கள்… அவங்கட முகமும் ஹாட்டாத்தான் இருக்கும்… பிசி இல்லாத கடைகளிலும் மூஞ்சிகளை 8 முழத்திற்கு நீட்டிக் கொண்டுதான் போனால் நிப்பாங்கள்.. ஒரு சந்தோசமா சிரிச்சு கதைச்சு ஒன்டும் சொல்ல மாட்டாங்கள்.. விரும்பினால் வாங்கு இல்லாட்டி ஓடு என்ற நிலையில்தான் இருப்பாங்கள்… எப்படா..புயல் வரும்.. நிலநடுக்கம் வரும். சண்டை வரும் என்டு யோசிக்கிற இனம் நம்மட வர்த்தக சமூகம்தான் பாருங்கோ….
றொலைக்ஸ் பேக்கரித் தம்பி.. உன்னை வைச்சு இந்த பதிவை எழுதியதுக்கும் நீ அறியாமல் இந்த வீடியோ எடுத்ததுக்கும் என்னை மன்னிச்சுக் கொள்ளுப்பா…பொலிஸ்ரேசன் பக்கம் ஓடிப்போடாதே…
நன்றி
வம்பன்


