போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகள் தொடர்பில் புதிய உத்தரவு!!
போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை சோதனை செய்யும் போது பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 01 முதல் அமுலுக்கு வந்துள்ள மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 151 இன் படி இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நியாயமான முறையில் சந்தேகித்தால், பொலிஸ் அதிகாரி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இந்த உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
அதன்படி, சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியதாக நியாயமான சந்தேகம் ஏற்படும் போது, சாரதியின் அசாதாரண எதிர்வினை, இயற்கைக்கு மாறான நடத்தை, பேச்சு, செயல்கள், இயக்கம், சமநிலை மற்றும் சாரதியின் கண்களின் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சாரதியை பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
போதைப்பொருள் உட்கொண்டதாக அடையாளம் காணப்பட்ட சாரதியை உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளதுடன், அந்த நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட உபகரணங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த சோதனை ஒரு பொலிஸ் நிலையத்திலோ அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான இடத்திலோ நடத்தப்பட வேண்டும் என்றும், அது பொதுமக்களுக்குத் தெரியாத வகையில் செய்யப்பட வேண்டும் என்றும் குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சாரதி ஒருவர் உமிழ்நீர் மாதிரியை வழங்க மறுத்தால், அந்த சாரதியை விரைவில் அரச வைத்திய அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் சோதனைக்காக ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் கூறுப்பட்டுள்ளது.
உமிழ்நீர் பரிசோதனைக்குப் பிறகு சாரதி ஏதேனும் போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் கலவையைப் பயன்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் அதிகாரிக்கு உறுதியானால், அந்த சாரதி விரைவாக அரச வைத்திய அதிகாரி அல்லது அரசு வைத்தியசாலையின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் மேலதிக சோதனைக்காக அனுப்பப்பட வேண்டும்.
அதன்படி, மேற்படி வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சம்பந்தப்பட்ட சாரதியின் இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் அல்லது பிற உடல் திரவங்களின் மாதிரியைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாதிரிகளில் ஆய்வக சோதனைகளைத் தொடர்ந்து, அரச வைத்திய அதிகாரியால் வழங்கப்பட்ட இறுதி அறிக்கை, சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினால், பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெறுவார் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு பிறப்பித்த புதிய உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
