எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் உயிர் தப்பியவர் கூறிய பரபரப்புத் தகவல்.! வீடியோ
எல்ல – வெல்லவாய பிரதேசத்தில் நேற்று (04) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிர் பிழைத்த நபர் ஒருவர், விபத்து ஏற்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் பேருந்து சாரதி “பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளது எனக் கூறினார்” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
காயமடைந்த அந்த நபர், தான் சாரதி மற்றும் நடத்துனருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சாரதி ஒரு வளைவில் திரும்பும்போது பேருந்தின் பிரேக் செயலிழந்ததாகத் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால், சாரதியின் இந்தக் கருத்தை நடத்துனரும், அருகில் இருந்த மற்ற பயணிகளும் சிரித்துக்கொண்டு கேலி செய்ததாகவும், அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
“இரண்டாவது வளைவில் திரும்பும்போது தான் பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதன் பின்னர் பேருந்து எதிர்த்திசையில் வந்த வாகனத்துடன் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது. நான் சுமார் ஒரு மணி நேரம் சுயநினைவின்றி இருந்தேன். ஒரு சிறு பிள்ளை அழுவதைக் கேட்டு கண் விழித்தேன். என்னால் நகர முடியவில்லை. பின்னர் மீட்புப் படையினர் வந்து எங்களை மீட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நபர் இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், “நாம் தங்காலையில் இருந்து வந்தோம். அதிகாலை 3 மணிக்கு நுவரெலியாவுக்குச் சுற்றுலா செல்லவிருந்தோம். எனது அம்மா தொழில் புரியும் அலுவலகத்தின் ஊடாக இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை பயணத்தைத் தொடங்கி மாலை வேளையில் எல்ல பகுதியை அண்மித்தோம். அந்தப் பகுதியில் ஒரு பாதை வளைவில் சென்று கொண்டிருந்த போது, ‘பிரேக் இல்லை’ என சாரதி கூறினார்.
அப்போது நான் சாரதி மற்றும் நடத்துனரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மூவரும் பேசிக் கொண்டிருந்த போதே பேருந்தின் சாரதி அவ்வாறு கூறினார். அவர் கூறியதைக் கேட்டு நடத்துனரும் ஏனையோரும் சிரித்தனர். பொய் கூறாதீர்கள் எனக் கூறியே அவர்கள் சிரித்தனர். அந்த வளைவைத் தாண்டி இரண்டாவது வளைவை அண்மித்த போதே ‘உண்மையிலேயே பிரேக் இல்லை’ என்று சாரதி கூறினார்.
அதன் பின்னரே சாரதி கூறியது உண்மை எனத் தெரிந்தது. இதன்போது பேருந்திற்கு முன்னாள் வந்த வாகனமொன்றின் மீது மோதிய பின்னரே விபத்து இடம்பெற்றது. அது எந்த வாகனம் என்று எனக்கு நினைவில் இல்லை. பேருந்து பள்ளத்தில் வீழ்ந்தபோது அதுவே எனது இறுதி நொடி என்று தோன்றியது. அதன் பினனர் நான் சுயநினைவை இழந்தேன்.
பின்னர் மயக்கம் தெளிந்த பின்னரே உயிருடன் இருப்பதை உணர்ந்தேன். வீழ்ந்து சுமார் ஒரு மணித்தியாலம் நான் சுயநினைவில் இல்லை. அதன் பின்னர் சிறு பிள்ளையொன்றின் சத்தம் கேட்டபோதே எழுந்தேன். எனினும், அந்தப் பிள்ளையை கைகளில் தூக்கிக் கொண்டு என்னால் எழும்ப முடியவில்லை. அதனால் இங்கு ஒரு சிறு பிள்ளை இருப்பதாகக் கூச்சலிட்டேன். அதன் பின்னரே அந்தப் பிள்ளையுடன் நானும் மீட்கப்பட்டேன்.
ஏதோ ஒரு ஜன்னல் ஊடாக நான் வெளியில் வீசப்பட்டேன். ஆனால், அது முன்னாலிருந்த ஜன்னலா அல்லது பின்னாலிருந்த ஜன்னலா என்பது நினைவில்லை. ஜன்னல் வழியாக வீசப்பட்டு மரமொன்றில் சிக்கி கீழே வீழ்ந்தேன். பேருந்து பிரண்டு பிரண்டு துண்டு துண்டாக கீழே வீழ்ந்தது” என்றார்.
இதேவேளை, பேருந்தின் நடத்துனர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “சாதாரண வேகத்திலேயே வந்து கொண்டிருந்தோம். வாகனமொன்றின் மீது மோதிய பின்னரே பேருந்து கவிழ்ந்தது. பிரேக் இல்லை என சாரதி கூறினார். அதிக வேகத்தில் வரவில்லை. விபத்து இடம்பெற்ற பின்னர் எனக்கு சுய நினைவில்லை. வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட பின்னரே நினைவு திரும்பியது” என்றார்.
இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


