செம்மணியில் குவியலாக எட்டு என்பு கூடுகள்!! என்புக்கூடுகளின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே , அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்றைய தினம் இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினம் சட்டை பொத்தான்கள் சிலவும் , காசும் , கைகளில் கட்டும் சிறிய தாயத்து ஒன்றும் புதைகுழியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 45 நாட்கள் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை 43 நாட்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் சனிக்கிழமையுடன் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முடிவுறுத்தப்படவுள்ளது
அதேவேளை புதைகுழியை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் புதைகுழிகள் காணப்பட்டலாம் என வலுவாக நம்பப்படுவதால் , மேலும் 08 வார கால பகுதி அகழ்வு பணிக்காக தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அதற்கான பாதீடுகளை தயாரித்தல் மற்றும் அதற்கான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை 11ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 43 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 52 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 06 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 218 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் 235 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

