புதினங்களின் சங்கமம்

வரலாற்றுப் புகழ் மிக்க கந்தரோடைக் கிராமம் தமிழரசுக்கட்சியால் புறக்கணிப்பு!! Photos

நாகரீக காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து வந்த கந்தரோடைக் கிராமத்தை வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் தமிழரசுக்கட்சி நிர்வாகம் கடுமையாகப் புறக்கணிப்பதாக கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கந்தரோடைக் கிராமம் உள்ளடங்கும் 9 ம் வட்டாரத்தில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு பெற்றவாக்குகளின் அடிப்படையில் வட்டாரரீதியாக வெற்றிபெற்று தெரிவான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும், அதே வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் நியமன உறுப்பினர் ஒருவரும் என கந்தரோடை மீது கவனம் செலுத்தவேண்டிய இரு பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளனர்.

கந்தரோடை வட்டாரம் உள்ளடங்கும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி தமிழரசுக் கட்சி ஆகும். தேசிய மக்கள் சக்தி இலங்கை நாட்டின் ஆளும் கட்சி என்பதுடன் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் சகல குழுக்களிலும் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியும் ஆகும் . அத்துடன் தமிழரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வாக்களிக்காமல் விலகியிருந்தமையே தமிழரசு ஆளுங்கட்சி யாகும் நிலையை ஏற்படுத்தியிருந்தது.

ஆக இரண்டு “ஆளும்” கட்சிகளின் உறுப்பினர்கள் இருவரும் கவனிக்காமல் இருப்பதால் தமது வீதிகள் பற்றைக் காடாகி மின் விளக்குகள் இல்லாமல் இரவில் கும்மிருட்டு மண்டிக் கிடக்கும் பேயுலாவும் ஊராகி வருவதாக கந்தரோடை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கந்தரோடைக் கிராமத்தின் விளாங்கனை வீதி, பருத்தியோலை வீதி, கல்லூரி வீதி, குளத்தடிக்கு அண்மையாக கந்தையா உபாத்தியாயர் வீதி, சங்கம்புலவு மயான வீதி முதலிய வீதிகள் பற்றைகள் மண்டிக் கிடக்கின்றன. பாடசாலை மாணவ மாணவிகள் அவ்வீதிகளால் பயணிக்க அச்சப் படுகின்றனர். வாகன விபத்துக்கள், குற்றச்செயல்கள் நிகழக் கூடிய ஏது நிலைகளும் உள்ளன.

பிரதேச சபையில் அண்மையில் புதிய தொழிலாளிகள் தினச் சம்பளத்துக்கு தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டும் இவ்வீதிகள் வலி தெற்கு பிரதேச சபையால் துப்புரவு செய்யப்படவில்லை.

அத்துடன் கந்தரோடை வீதிகள் இரவில் இருள் மண்டிக் கிடக்கின்றன. உள்வீதிகளில் நூறுக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியாமல் கிடக்கின்றன. இவற்றுக்கான புதிய மின்குமிழ்களைப் பொருத்தும் பொறுப்பும்
அப்பிரதேச சபை க்குரியதாகும்.

மேலும் கந்தரோடையில் டாக்டர் சுப்பிரமணியம் வீதியில் ஆலடி தொடக்கம் வலி தெற்கு பிரதேச எல்லைவரை மின் விளக்குகள் நீண்ட காலமாக அகற்றப்பட்டுள்ளதால் இரவில் துவிச் சக்கர வண்டிகளிலும் ஏனைய சிறிய ரக வாகனங்களிலும் பயணம் செய்வோர் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும் கந்தரோடை-உடுவில் வீதியின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள மருத நிலச் சூழலில் குளக்கரையோரம் அமைக்கப்பட்ட சுற்றுலாவிகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அனைத்தும் சிதைந்து அலங்கோலப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடமாகாண சபை நிர்வாகம் இருந்த காலத்தில் இக் கட்டமைப்புக்கள் கந்தரோடை-உடுவில் குளக்கரையில் அமைக்கப்பட்டவையாகும்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்காக கந்தரோடையில் போட்டியிட்டுவென்ற தமிழரசுக்கட்சி உறுப்பினரிடமும் கந்தரோடையில் போட்டியிட்டு நியமிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினரிடமும் தமது வேண்டுகோள்களை பல தடவைகள் தாம் முன் வைத்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க ப் பட வில்லை என்றும் கந்தரோடை மக்கள் தெரிவிக்கின்றனர்.

May be an image of tree, road and grassMay be an image of grass, tree, street and roadMay be an image of windmill